அதிஷியை முதல்வராக்கியது ஏன்… கெஜ்ரிவால் அரசியல் நகர்வின் பின்னணி என்ன?

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை, ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்களைச் சிறையில் தள்ளியது. எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தொடங்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் வரை மதுபானக் கொள்கை வழக்கில் சிறை சென்றனர். அந்த வழக்கில் சிக்கி, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சராக இருந்த அதிஷியை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார். கெஜ்ரிவாலின் இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில் இருப்பது என்ன?

புதிய மதுபானக் கொள்கை!

நவம்பர் 17, 2021 அன்று டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வந்தது. புதிய கொள்கையின்படி மது விற்பனையில் பல்வேறு விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, மதுபான விற்பனையிலிருந்து அரசு விலகிக்கொண்டு, தனியாருக்கு மது விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டன. கட்டாய எம்.ஆர்.பி இல்லாமல், தாங்களே விலையைத் தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமும் தனியாருக்கு வழங்கப்பட்டது. டெல்லியில், மது அருந்தும் வயதும் 25-லிருந்து 21 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த மதுபானக் கொள்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும் குற்றம்சாட்டின.

மணீஷ் சிசோடியா – கெஜ்ரிவால் – சஞ்சய் சிங்

ஜூலை 22, 2022-ல், டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், `புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விற்பனையாளர்களுக்குத் தேவையற்ற சலுகைகளை வழங்கியிருக்கிறார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து, ஜூலை 30-ம் தேதி அன்று சர்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது டெல்லி அரசு.

தொடர்ந்து, புதிய மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடுகளை சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் விசாரிக்கத் தொடங்கினர். இந்த விசாரணையில், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியோ, பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா வரை கைதாகினர். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைதுசெய்யப்பட்டார்.

ராஜினாமா செய்த கெஜ்ரிவால்!

ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின்னர், ஜாமீனில் விடுதலையானார் கெஜ்ரிவால். உச்ச நீதிமன்றமோ, `முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது; கோப்புகளில் கையெழுத்துப் போடக்கூடாது’ என்று கடும் நிபந்தனைகளுடன்தான் ஜாமீன் வழங்கியிருந்தது. சிறையிலிருந்து வெளியில் வந்த கெஜ்ரிவால், “நீதிமன்றத்தில் எனக்கு நியாயம் கிடைத்துவிட்டது. மக்கள் மன்றத்திலும் நியாயம் கிடைக்க வேண்டும். எனவே, தேர்தலில் வென்ற பிறகுதான் முதல்வர் நாற்காலியில் அமருவேன். எனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்” என்று அறிவித்தார். அதோடு, `பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலை நவம்பர் மாதத்திலேயே நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையையும் தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தார்.

Arvind Kejriwal – அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும், “மக்கள் மன்றத்தில் அனுதாபத்தைத் தேடிக்கொள்ள இப்படி நாடகமாடுகிறார் கெஜ்ரிவால். ஆனால், டெல்லி மக்கள் கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி என்பதைப் புரிந்துகொண்டனர். நீதிமன்றம், வேறு எந்தத் தலைவருக்கும் விதிக்காத கட்டுப்பாடுகளை கெஜ்ரிவாலுக்கு விதித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால், முதல்வராக எந்தவொரு பணியையும் கெஜ்ரிவால் செய்ய முடியாது என்பதால்தான், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்கூட சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியானார். ஆனால், அவருக்கு இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஒரு குற்றவாளியைப் போலத்தான் கெஜ்ரிவாலை நீதிமன்றம் நடத்தியிருக்கிறது. அதிஷி முதல்வராக்கப்பட்டிருந்தாலும், ரிமோட்டை வைத்து அவரை இயக்கப்போவது கெஜ்ரிவால்” என்கின்றனர்.

முதல்வராக்கப்பட்ட அதிஷி!

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிஷியை முதல்வராக முன்மொழிந்தார் கெஜ்ரிவால். எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதை வழிமொழிந்தனர். பின்னர், ஆளுநரைச் சந்தித்து கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார் அதிஷி.

கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோதே, அதிஷிதான் கட்சியின் முகமாக இருந்தார். சிறையிலிருந்த கெஜ்ரிவால், `சுதந்திர தினத்தன்று எனக்குப் பதிலாக அதிஷியை கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்’ என ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் நிராகரித்ததால் அது நடக்காமல் போனது.

ஸ்வாதி மாலிவால் – அதிஷி

`அதிஷியை கெஜ்ரிவால் முன்னிறுத்துவது ஏன்?’ என்பது தொடர்பாகப் பேசும் டெல்லி அரசியல் பார்வையாளர்கள் சிலர், “2013 முதலே ஆம் ஆத்மி கட்சியில் பயணிக்கும் அதிஷிதான், கெஜ்ரிவால் அமைச்சரவையிலிருந்த ஒரே பெண். ஆம் ஆத்மியின் முன்னாள் எம்.பி ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவால் வீட்டில் வைத்துத் தாக்கப்பட்டதாகக் கிளம்பிய விவாகரத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கின. அப்போதே `பெண்களுக்கு எதிரான கட்சி ஆம் ஆத்மி’ என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதனால், ஒரு பெண்ணை முன்னிறுத்த விரும்பினார் கெஜ்ரிவால். நன்கு படித்த மிடில் கிளாஸ் மக்கள்தான் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி. அதை மனதில் வைத்து, ஆம் ஆத்மியிலேயே அதிகம் படித்தவரான அதிஷியை முதல்வராக்கியிருக்கிறார் கெஜ்ரிவால்.

சமீபத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்ற போது, சம்பாய் சோரனை முதல்வராக்கினார். ஆனால், அவர் கட்சிக்குள் கலகம் செய்து, தற்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டார். அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் அதிஷியை தேர்வு செய்திருக்கிறார் கெஜ்ரிவால்” என்கின்றனர்.

`பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிஷியை முதல்வராக்கியிருக்கும் கெஜ்ரிவாலின் முடிவு ஆம் ஆத்மிக்குக் கைகொடுக்குமா?’ என்ற கேள்விக்கான விடையை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் டெல்லி மக்கள் தெரிவிப்பார்கள்!