“பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என நீங்கள் எப்படிக் கூறலாம்!” -மம்தா அரசுக்கு சந்திரசூட் கேள்வி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், தேசிய அளவில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தரப்பில் போராட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே, மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி, மருத்துவர்கள் போராட்டம்

`பெண்கள் பணிபுரியும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைகளை இணைக்கும் வகையில் மொபைல் செயலி உருவாக்கப்படும்’ என்ற அந்த அறிவிப்பில், `அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மகளிர் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் இரவு நேர போலீஸ் ரோந்து மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில், ஒட்டுமொத்த பாதுகாப்பு மேற்பார்வைக்காகக் காவலர்களால் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவர். மருத்துவர்கள் உள்பட பெண்களின் வேலை நேரம் 12 மணிநேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இரவு பணிகளில் பெண் மருத்துவர்கள் ஜோடியாக பணியாற்றும் வகையில் ஷிப்டுகள் ஏற்பாடு செய்யப்படும். அதேசமயம், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களுக்கான இரவுப் பணியையும், பாதுகாப்புக் காவலர்களையும் முடிந்தவரைத் தவிர்க்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், `பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என நீங்கள் எப்படிக் கூறலாம்’ என மம்தா அரசைக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மாநில அரசு சார்பாக ஆஜராகியிருந்த கபில் சிபலிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி சந்திரசூட், “பெண்கள் இரவில் வேலை செய்ய முடியாது என்று நீங்கள் எப்படிக் கூறமுடியும்? பெண் மருத்துவர்களை ஏன் மட்டுப்படுத்த வேண்டும்? அவர்கள் சலுகையை விரும்பவில்லை. அதே ஷிஃப்டில் வேலை செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

மிஸ்டர் சிபல் அந்த அறிவிப்பை பாருங்கள், பெண்களுக்குப் நீங்கள் (மாநில அரசு) பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அது உங்களின் கடமை. விமானிகள், ராணுவ வீராங்கனைகள் எனப் பலர் இரவில் பணிபுரிகின்றனர். எனவே, பெண்கள் இரவில் வேலை செய்ய முடியாது என்று நீங்கள் கூற முடியாது. மேற்கு வங்க அரசு அந்த அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.