Atishi: கல்வித்துறை பணிகள்… கெஜ்ரிவால் சாய்ஸ் – டெல்லி முதல்வர் ரேசில் வென்ற ‘அதிஷி’

‘டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததில் இருந்து, ‘இவர் தான் அடுத்த முதல்வர்… இவர் தான் அடுத்த முதல்வர்’ என சில பெயர்கள் அடிப்பட்டுக்கொண்டிருந்தது.

அந்தப் பெயர்களை எல்லாம் தள்ளிவிட்டு டெல்லியின் தற்போதைய கல்வி அமைச்சர் ‘அதிஷி’ டெல்லி முதலமைச்சர் ஆகப்போகிறார். இவருடைய பெயரும் முன்னாள் நடந்த பேச்சுகளில் அடிப்பட்டது தான். இவருடன் சேர்ந்து முதல்வர் ரேசில் பேசப்பட்ட முக்கிய நபர்கள் சௌரப் பரத்வாஜ், ராகவ் சதா, கைலாஷ் கலோட், சஞ்சய் சிங்.

ஏன் அதிஷி?

ஏன் அதிஷி?

ரேசில் இத்தனை பெயர் இருந்தும் அதிஷி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காரணம், அவரின் பணிகளே என்கிறார்கள் ஆம் ஆத்மி நிர்வாகிகள். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அதிஷி சேர்ந்த சமயமே கட்சியின் கொள்கை திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைதானப்பின், டெல்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக இருந்தவர் இவர் தான். இவர் 2023-ல் தான் டெல்லி கல்வி அமைச்சராக பதவியேற்று இருந்தாலும், அதிஷி 2015 முதல் 2018 வரை சிசோடியாவுக்கு கல்வித்துறை சம்மந்தமான ஆலோசகராக இருந்திருக்கிறார். தற்போது இவர் கல்வித்துறை மட்டுமல்லாது பொதுப்பணித்துறை, கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஹேப்பிநஸ் திட்டம்

டெல்லியில் சமீபத்தில் நடந்துள்ள அனைத்து கல்வித்துறை மாற்றங்களிலுமே இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மாணவர்களுக்கு சமூக மற்றும் உணர்வு பயிற்றுதலை வழங்கும் ‘ஹேப்பிநஸ்’ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பெரிதும் பாராட்டப்பட்டார். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, பள்ளி மேலாண்மை கமிட்டி அமைப்பு, தனியார் பள்ளி கட்டண உயர்வு தடுப்பு ஆகியவற்றிலும் இவரது பங்கு உண்டு.

அரவிந்த் கெஜ்ரிவாலின் சாய்ஸ்(Arvinnd Kejriwal)

கட்சி பணியிலும், ஆட்சி பணியிலும் தனக்கான பெயரை உருவாக்கியதானால் அதிஷி மீது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதிப்பு உண்டு. இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி அரசின் கொடியேற்ற நிகழ்வில் கொடியேற்றுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுத்தது அதிஷியை தான். ஆனால் இதை டெல்லி துணை நிலை ஆளுநர் மறுத்துவிட்டார். இப்போதுமே அரவிந்த் கெஜ்ரிவால் தான் அதிஷியை முதல்வராக பரிந்துரைத்துள்ளார். இதை பிற கட்சி உறுப்பினர்களும் ஏற்று தான் இப்போது இவர் டெல்லி முதலமைச்சர் ஆக உள்ளார்.

டெல்லி முதலமைச்சர் ஆனதும் அடுத்து பிப்ரவரி மாதத்தில் வரவிருக்கும் தேர்தலுக்குள் ஆம் ஆத்மி கட்சியை இன்னும் சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்வார் என்றும், தேர்தல் பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY