தந்தைப் பெரியாரின் 146-வது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு திடீரென விஜய் என்ட்ரி கொடுத்ததும், அதற்கு முன்னதாக ‘பெரியார் பாதையில் பயணிப்போம்’ என அறிக்கை வெளியிட்டதும் த.வெ.க வட்டாரங்களில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது. விஜய்யின் இந்த திடல் விசிட் திடீரெனத்தான் திட்டமிடப்பட்டதாகச் சொல்கிறார்கள் அவரின் கட்சியைச் சேர்ந்த சீனியர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்திற்குச் செல்லும் திட்டம் ஏதும் தொடக்கத்தில் இல்லை. ஒரு அறிக்கையை மட்டும் வெளியிடத்தான் முதலில் முடிவெடுக்கப்பட்டது. பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்திலேயே பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தவும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர். பிறந்தநாளன்று, ‘சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். அவருடைய சமத்துவம், சமஉரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்’ என அறிக்கை வெளியிட்டார் தலைவர் விஜய்.
‘பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிடலாம். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம்’ என நிர்வாகிகள் சொல்லவும், ‘நாம் கட்சியைத் தொடங்கிய பிறகு கொண்டாடும் பெரியாரின் முதல் பிறந்தநாள் இது. படத்திற்கு மரியாதை செலுத்துவது சரியாக இருக்குமா..?’ எனத் திடீரென கேள்விக் கேட்டார் தலைவர் விஜய்.
தொடர்ந்து, ‘மற்ற தலைவர்களெல்லாம் எங்கே மரியாதை செலுத்தியிருக்காங்க…’ என தலைவர் கேட்கவும், ‘சென்னை அண்ணாசாலையிலுள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வரும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அங்கேயேதான் வி.சி.க தலைவர் திருமாவளவனும் மலர் மரியாதை செய்திருக்கிறார். சேலத்தில், பெரியாரின் சிலைக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்திருக்கிறார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள பெரியாரின் சிலைக்கு ஓ.பி.எஸ் மரியாதை செலுத்தியிருக்கிறார்’ எனப் பட்டியலிட்டனர் நிர்வாகிகள்.
சற்று நேரம் அமைதியாக யோசித்த தலைவர் விஜய், ‘எல்லோருமே எங்கேயோ இருக்கிற பெரியாரின் சிலைக்கும், படத்திற்கும்தான் மரியாதை செலுத்தியிருக்காங்க. நாம ஏன் பெரியார் திடல்ல மரியாதை செலுத்தக் கூடாது. அதுக்கு உடனே பர்மிஷன் வாங்குங்க…’ என்று சொல்லவும், நிர்வாகிகளெல்லாம் ஷாக். அவருடைய இந்த முடிவை நாங்கள்கூட எதிர்பார்க்கவில்லை.
உடனடியாக, வேப்பேரியிலுள்ள பெரியார் திடல் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புதுச்சேரி ஆனந்த். அனுமதி கிடைக்கவும், ‘வண்டியை திடலுக்கு விடுங்கண்ணே…’ என உற்சாகமாக காரில் ஏறிவிட்டார் தலைவர் விஜய். அவருடைய திடல் விசிட் கடைசி நிமிடத்தில் முடிவெடுக்கப்பட்டதால், எழும்பூர் பகுதி நிர்வாகிகளுக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. பெரிய வாகனத்தில் வந்தால், அவரைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடிவிடும். அருகிலேயே எழும்பூர் ரயில் நிலையம், கமிஷனர் அலுவலகம் அமைந்திருப்பதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால், ஷிஃப்ட் ரக சிறிய காரிலேயே பயணமானார். பெரியார் திடலுக்கு வந்தவுடன், மாலையையும் பூ தட்டையும் எடுத்துவர புதுச்சேரி ஆனந்த் தயாரானார். ஆனால், ‘நானே கொண்டுவர்றேன்..’ என அதையும் தானே எடுத்துக்கொண்டு, திடலிலுள்ள பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தலைவர் விஜய்.
இன்று காலைதான், ‘திராவிட சாயத்தைப் பூசிக் கொண்டிருக்கிறார் விஜய். சாயம் வெளுக்கிறதா, இல்லை வேறு சாயம் பூசுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்’ என விமர்சித்திருந்தார் பா.ஜ.க சீனியரான தமிழிசை செளந்தரராஜன். பெரியார் திடலுக்கு விசிட் அடித்ததன் மூலமாக, ‘என் சாயம் வெளுக்கவில்லை. என் நிறமே திராவிடக் கொள்கைதான்’ என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் தலைவர் விஜய்” என்றனர் விரிவாக.
விஜய் தன் கட்சியைத் தொடங்கி ஏறத்தாழ எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இதுநாள் வரையில், எந்தத் தலைவரின் பிறந்தநாளுக்கும் அவர் நேரில் மரியாதை செலுத்தியதில்லை. பெரியாரின் பிறந்தநாளில் முதல்முதலாக அவர் களத்திற்கு வந்திருப்பது, அவரது கட்சி வட்டாரங்களில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY