`1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ – பல்கலை., தொல்லியல் துறை தலைவர்

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல்பாறைகள் தெய்வத் திருவுருவங்களை வடிப்பதற்கு ஏற்றதாக இருந்துள்ளது. இங்குள்ள பாறையில் இருந்து தான், திருச்செந்தூர் கோயிலின் மூலவர் திருவுருவம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

குறுக்குத்துறை முருகன் கோயில்

அப்படி திருச்செந்தூர் முருகனை உருவாக்கிய சிற்பி, மற்றொரு முருகன் விக்ரகம் செய்ய நினைத்து, இங்கிருந்த கல் பாறை ஒன்றில் வள்ளி, தெய்வானை உடன் கூடிய முருகனின் திருவுருவை செதுக்கினார்.

ஆற்றுக்கு நீராட வந்தவர்கள் பலரும் இந்த முருகனை வழிபட்டனர். பின்னர், சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பாறையை ஒட்டி சிறிய கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என நம்பப்பட்டது. இந்நிலையில், தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் துறையைச் சார்ந்தவர்கள் கல்வெட்டுகளை ஆராய்ந்ததில், இந்த கோயில் 950 ஆண்டுகள் பழமையானது என சொல்கிறார்கள்.

இது குறித்து பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சி.சுதாகரிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,

“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மீனா, இந்தக் கோயிலை தொல்லியல் ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் கோயில் அருகில் இரண்டு கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார்.

மாணவி மீனா

இந்த மாணவியுடன் படிக்கும் சக  மாணவியர்களான சுகன்யா, பாரதி மற்றும் ரமணாவுடன் இணைந்து இந்த இரு கல்வெட்டுக்களையும் படி எடுத்தனர். முதல் கல்வெட்டுக் கோயில் அருகே உள்ள படித்துறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டின் மேல் பகுதியில்தான் இந்த முருகன் கோயிலின் படித்துறை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி மண்டபத்தின் தூண் அடியில் உள்ளது.

வெளியில் தெரியும் இந்தக் கல்வெட்டில் ஆறு வரி தகவல்கள் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முற்று பெறாத கல்வெட்டாகும். எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு 950 ஆண்டுகள் பழமையானது எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் உறுதி செய்தனர்.

இதுமாதிரி கோயில் உள்ளே உள்ள மண்டப தூண்கள்  மற்றும் சுவர்ப் பகுதியில் 950 ஆண்டுகள் பழைமையான பல வகையான கட்டடக்கலை அங்கங்கள் மற்றும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த கோயிலின் கோபுரமும் கருங்கல்லால்தான் கட்டப் பட்டுள்ளது. இந்தக் கருங்கல் கோபுரத்திற்கு மேல் தற்போது தங்க நிற வர்ணம் பூசப்பட்டுள்ளதால் இதன் தொன்மையை கண்டறிய முடியவில்லை.

இந்தக் கல்வெட்டும், கட்டடக்கலை அங்கங்களும், கோபுரமும் இந்தக் கோயில் 950 ஆண்டுகள் பழமையானது என்பதை  உறுதிப்படுத்துகின்றன.

இந்தக் கோயிலிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிதிலமடைந்த ஒரு மண்டபம் உள்ளது. இங்கு இரண்டாவது  கல்வெட்டு  கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டில் ஆறு வரிகள் உள்ளது.  இந்தக் கல்வெட்டு ஆற்றுத் தண்ணீரைப் பிரித்து மடை மூலம் கொண்டு செல்வதை விளக்குகிறது. இதுவும் ஒரு முற்றுப் பெறாத கல்வெட்டு. இதுவும் 950 ஆண்டு பழமையான கல்வெட்டு என உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பேராசிரியர்கள்: சி.சுதாகர், முருகன் மற்றும் மதிவாணன்

முருகன் கோயிலின் கருவறை ஒரு பாறையைக் குடைந்து சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மண்டபமும் கோபுரமும் 950 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக அமைக்கப்பட்ட இந்தக் கருவறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனக் கணிக்க முடிகிறது.

ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்!

ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தைத் தாக்குப் பிடித்து நிற்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், சுமார் 1000 வெள்ளப் பெருக்கை இந்தக் கோயில் தாக்குப்பிடித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தக் கோயிலின் கட்டடக்கலை ஆகும். வெள்ளம் உள்ளே வரும்போதும், வெள்ளம் வடியும் போதும் எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்ற வகையில் மிகவும் நுட்பமாக கட்டியுள்ளனர். இத்தகைய பெருமையைப் பெற்ற இந்தக் கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் மேலும் ஆய்வு செய்ய உள்ளோம்.” என்றார்.

இந்தத் தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகளையும் பேராசிரியர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY