‛நான் காரை ஓட்டலை; கடவுளையே ஓட்டுறேன்’ என்று ‛சூது கவ்வும்’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்தக் கார் ஜாகுவார். ஆம், இந்தக் கடவுளை வாங்க வேண்டும் என்றால், தட்சணை விஷயத்தில் – அதாங்க பட்ஜெட்டில் கொஞ்சம் தனவானாக இருக்க வேண்டும். காரணம் – இது CKD (Completely Knocked Down) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு 2008-ல் டாடா மோட்டார்ஸ் இதைக் கையகப்படுத்திய பிறகும், இந்த விலையில் கொஞ்சூண்டுதான் வித்தியாசம் வந்தது.
இத்தகைய வெளிநாட்டு சொகுசு கார்களின் விலை குறைய வேண்டுமென்றால், ஒரே வழி இதை CBU-வாக விற்பனை செய்வது. ஆனால், டாடா மோட்டார்ஸ் அதையும் தாண்டி ஜாகுவார் லேண்ட்ரோவரை ‛இந்தியன் மேக்’, இல்லை, `மேக் இன் தமிழ்நாடு’ ஆகவே விற்பனை செய்து கலக்கப் போகிறது. ஆம், நம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கம் எனும் இடத்தில் இதற்கான தொழிற்சாலை வரப் போகிறது.
இதற்கு இந்த செப்டம்பர் மாசம் 28-ம் தேதி அடிக்கல் நாட்டவிருக்கிறார் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதற்கான ஆரம்பப் புள்ளி உலக முதலீட்டாளர் மாநாட்டில்தான் தொடங்கியது. இங்கேதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதன் முறையாக நம் தமிழ்நாட்டில் 9,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய Memorandum of Understanding (MoU) புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது நம் அரசுடன்.
இந்தத் தகவலை நம் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முதல் கட்டமாக இந்தப் புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் டாடா மோட்டார்ஸ். ரூ.9,000 கோடி செலவில் உருவாகப் போகும் இந்தத் தொழிற்சாலையில்தான் இனிமேல் பிரிட்டன் மேக்கான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசுக் கார்கள் தயாரிக்கப்படும். இதனால், இந்தக் கார்களின் விலை மிகக் கணிசமாகக் குறையும். ரேஞ்ச்சோவர், வெலர், இவோக், டிஃபெண்டர், டிஸ்கவரி, ஜாகுவார் I-பேஸ், F-பேஸ், F-டைப் போன்ற காஸ்ட்லி சொகுசு எஸ்யூவிகள் மற்றும் செடான் கார்கள் அனைத்துமே இங்கேதான் தயாரிக்கப்படும்.
நம் தமிழக முதல்வர் ஸ்டாலின், லேண்ட்ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிதான் பயன்படுத்தி வருகிறார் என்பது இங்கே ஹைலைட்டான விஷயம். இதைத் தொடர்ந்து, EMA (Electrified Modular Architecture) எனும் ப்ளாட்ஃபார்மில், Next Gen ஜாகுவார் எலெக்ட்ரிக் கார்களும் இங்கேதான் தயாரிக்கப்பட இருக்கிறதாம். தென்னிந்தியாவில் கர்நாடகாவின் Dharwad தொழிற்சாலைக்குப் பிறகு டாடாவின் 2-வது தென்னிந்தியத் தொழிற்சாலை இது.
இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆட்டோமொபைல் இன்ஜீனியர்கள், இப்போதே ராணிப்பேட்டைக்குப் படையெடுத்து விடுங்கள். உலகம் முழுக்க ஓடப்போகும் ஜாகுவார் கார்களின் ஆரம்பம் நம் ஊரில் இருந்துதான் தொடங்கப் போகிறது என்பது பெருமைதானே! ராணிப்பேட்டைதான் இனி சொகுசு கார் பேட்டையின் ராணி!