விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “கிராமங்களை உள்ளடக்கிய வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது. கட்சியே கழகம் என்ற கொள்கையில் அண்ணா தொடங்கிய கட்சி இன்று குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது. நேர்மையான ஆட்சியை கொடுத்த அண்ணாவின் பெயரை கொண்டுள்ள கட்சிகள் இன்று விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து வருகிறார்கள். ஜாதி மாதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை வழிநடத்தினால் மட்டுமே தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.
பல தலைவர்கள் இன்று ஊடகத்தினர் கேள்வி கேட்கும்போதே அவர்களை ஒருமையிலும் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத, ஏமாற்ற ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வணிக நிறுவனம் போல் கட்சியை நடத்திய காரணத்தினால் அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன் காரணமாக 10 ஆண்டு காய்ந்து கிடந்த தி.மு.க.விற்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை காய்ந்த மாடு கரும்பு தோட்டத்தில் பாய்ந்தது போல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை கைகள் கட்டப்பட்டு ஏவல் துறையாக மாறியுள்ளது. ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் துணையோடு அதிகாரிகளை மிரட்டும் செயல் நடைபெற்று வருகிறது. 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதை மருந்து கலாச்சாரத்திற்கு அடிமையாகி 5000 ரூபாய்க்கும், 10000 ரூபாய்க்கும் கூலிப்படைகளாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாததால் ஆசிரியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து துறையினரும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவனே மது ஒழிப்பை அமல்படுத்த மாநாடு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டது.
தி.மு.க ஆட்சியே காரணம்..
அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெல்லாம் மு.க.ஸ்டாலின் போராடினாரோ அதே கோரிக்கைகளுக்கு இன்று போராடுபவர்களை கைது செய்கிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்தாத துறையே இல்லை. தமிழகத்தில் விதவிதமான போதை பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் நாள்போக்கில் பைத்தியம் ஆவார்கள் அல்லது கொலையாளியாக மாறுவார்கள். தமிழகத்தில் கூலிப்படை அதிகரிக்க தி.மு.க ஆட்சியே காரணம்.
பா.ஜ.க வை, தி.மு.க வினர் வெளியே விமர்சித்து பேசுவார்கள். ஆனால் பா.ஜ.க விடம், தி.மு.க மண்டியிட்டு நிற்கும் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள். விருதுநகர் அமைச்சர்கள் கூட ஊழலில் சிக்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். ஆட்சி இருக்கும் வரைதான் இவர்களுக்கு பாதுகாப்பு.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி வந்த பின்னர்தான் இந்தியாவில் தீவிரவாதம் குறைந்துள்ளது. சிறுபான்மையினரிடம் பொய் சொல்லி ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று வருகிறார். அதை அவர்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் 2026ல் உறுதியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று வெறுமனே ரொட்டியும், பிரியாணியும் மட்டுந்தான் சாப்பிட்டு வருகிறார்கள். வேறெதும் அவர்கள் செய்யவில்லை” என விமர்சித்து பேசினார்.