`விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்தில்லை, இருமொழிக் கொள்கை..’ – விஜய் அரசியல் குறித்து தமிழிசை விமர்சனம்

‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய், ‘விநாயகர் சதூர்த்தி’க்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும், அண்ணாவின் பிறந்த நாளுக்கு, “சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர்” என வாழ்த்திப் பதிவிட்டிருந்தார்.

விஜய்யின் வாழ்த்து

அவ்வகையில் நேற்று ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், இன்று, தந்தை பெரியார் பிறந்த நாளுக்கு, ” “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஒரு வரியில், “பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அரோக்கியமும், ஆயுளும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா, தந்தை பெரியாருக்கு ஸ்பெஷலாக வாழ்த்து தெரிவித்திருப்பதும், விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், ஓணத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதும் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதுபோல் தெரிகிறது. திராவிட சாயலில் இன்னொரு கட்சி தமிழ்நாட்டில் தேவையில்லை. தேசிய சாயலில்தான் கட்சிகள் இனி வரவேண்டும்.

தமிழிசை, விஜய்

விஜய் திராவிட கட்சிகள் பாணியில் பயணிக்காமல், வேறு பாணியில் பயணிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரும் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது, இருமொழிக் கொள்கையை ஆதரிப்பது என திராவிட கட்சிகளின் பாணியில் பயணிக்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி லாபம் பார்க்க வேண்டும். ஆனால், மக்களுக்கு, படிப்பிற்கு, வளர்ச்சிக்கு பல மொழி தேவையில்லை என்று இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார். திராவிட சாயத்தை பூசிக்கொள்வது விஜய்க்கு நல்லதல்ல” என்று பேசியிருக்கிறார்.