AAP: டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? – சாய்ஸில் 3 அமைச்சர்கள், 2 எம்.பி-க்கள்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான நாள்முதல், பாஜக உரைத்துவந்த முழக்கத்துக்கு கெஜ்ரிவாலே தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக் கிழமை ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் நேற்று, இன்னும் இரண்டு நாள்களில் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தார். அதோடு, 2025 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளித்த பிறகு, முதல்வர் பதவியை ஏற்பேன் என்றும் கூறியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் (Arvinnd Kejriwal)

இதனால், ஆம் ஆத்மியிலிருந்து முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறவர் யார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே, பணமோசடி வழக்கு மற்றும் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஆம் ஆத்மி மூத்த அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோர் தங்களின் பதவிகளைச் சிறையிலிருந்தபோதே ராஜினாமா செய்துவிட்டனர். அதனால், இவர்கள் இருவரும் முதல்வர் பதவியை ஏற்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் பதவிக்கான சாய்ஸில் இருப்பதாகக் கூறப்படும் ஐந்து பேர் யார் என்று தற்போது காணலாம்.

சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோர் பதவி விலகியபோது அவர்களுக்குப் பதில் அமைச்சர்களாகப் பதவியேற்ற இருவரில் ஒருவர் அதிஷி (43). கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரான இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியாவார். கல்காஜி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வான அதிஷி, டெல்லி பள்ளிகளில் கல்வியை மேம்படுத்துவதற்கான தனது அரசின் முதன்மை வேலைகளில் விரிவாகப் பங்காற்றியிருக்கிறார்.

அதிஷி

மேலும், கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதற்கு இவரையே தேர்வுசெய்தார். மேலும், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையிலிருந்தபோது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்தவரும் இவரே. இதனால், ஆம் ஆத்மியில் நம்பிக்கைக்குரியவராக அதிஷி திகழ்வதால் அடுத்த முதலமைச்சர் பட்டியலில் இவரின் பெயர் முதன்மையாக அடிபடுவதாகக் கூறப்படுகிறது.

சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோரின் ராஜினாவுக்குப் பிறகு அமைச்சராகப் பதவியேற்றவர் சௌரப் பரத்வாஜ் (44). கைலாஷ் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றிபெற்றவரான இவர் தற்போது சுகாதாரத்துறை அமைச்சாகப் பதவி வகிக்கிறார்.

சௌரப் பரத்வாஜ்

மேலும், 2013 டிசம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான கெஜ்ரிவாலின் 49 நாள்கள் அரசிலும் சௌரப் பரத்வாஜ் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படும் இவர், கட்சியின் முக்கிய தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டபோது அதிஷியுடன் இணைந்து கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரை வந்தார்.

ஆம் ஆத்மி மட்டுமல்லாது நாட்டின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் ராகவ் சதா (35). இவர், கட்சியில் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினர் பொறுப்பில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 2020 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற ராகவ் சதா, 2022 முதல் மாநிலங்களவை எம்.பி-யாக இருக்கிறார்.

ராகவ் சதா

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் ஆம் ஆத்மியின் குரலை நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துவருகிறார். குறிப்பாக, 2022-ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைலாஷ் கெஹ்லோட் (50). தற்போது கெஜ்ரிவால் அமைச்சரவையில் நிதி மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல இலாகாக்களை கவனித்து வருகிறார். 2015 முதல் டெல்லியின் நஜப்கர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

கைலாஷ் கெஹ்லோட்

மேலும், தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டிலும் பயிற்சி பெற்ற வழக்கறிஞர். 2005 மற்றும் 2007-க்கு இடையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினர் நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் குரலாக ஒலிப்பவர் சஞ்சய் சிங் (52). தேசிய அளவில் ஆம் ஆத்மியில் நன்கறிந்த முக்கியமான முகங்களில் சஞ்சய் சிங்கும் ஒருவர். ஆம் ஆத்மியின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவரான இவர், கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சஞ்சய் சிங்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, கெஜ்ரிவாலுடன் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் சிங் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார்.

சொன்னதைப் போலவே கெஜ்ரிவால் பதவி விலகினால் அடுத்துவரும் நான்கைந்து மாதங்களுக்குத்தான் புதிய முதல்வர் இருப்பார் என்றாலும், தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY