“திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது” – எல்.முருகன் விமர்சனம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தபோதே திமுக-விடம் பெரிய டிமாண்ட் வைப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். அவரது தேவை என்ன என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

எல்.முருகன்

தமிழகத்தில் ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி விசிக கிடையாது. பாஜக, பாமக-வை பற்றி பேச திருமாவளவனுக்கு யோக்கியதை கிடையாது.

அமெரிக்கா சென்ற முதல்வர், தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் செயல்படும் கம்பெனிகளின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் நலம் குறித்து சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு சென்றிருந்தால், அது பற்றி வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் திமுக கூட்டணியினருக்கு அமைச்சரவை பங்கு என்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை மொட்டை அடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்னையில் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு அவர்களை விடுவித்து வருகிறது. இலங்கை-இந்தியா மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் மீனவர்கள் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு வருகிறது.

எல்.முருகன்

செல்போன் வைத்திருப்பவர்களெல்லாம் செய்தியாளர்களாகி விட்டனர். வரைமுறை இன்றி செயல்படும் யூடியூப் சேனல்களை வரையறைப்படுத்த மத்திய அரசு கருத்துக்களை கோரியுள்ளது.

உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறு நகரங்களிலும் தனியார் எப்.எம் ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது. பாஜகவிற்கு கிடைத்த முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து திமுக, முருகன் மாநாடு நடத்தியுள்ளது. இது எல்லாம் திமுகவின் தேர்தல் அரசியல் வெளிப்பாடு” என்றார்.