விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை அன்று, ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்த வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு, டெலிட் செய்யப்பட்டு, மீண்டும் பதிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமூக வலைத்தளங்களில் இது பேசுபொருளானது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். அப்போதும் அந்த அழைப்பு அதிமுகவுக்கும் தான் என பதில் வர, அதுவே கூட்டணிக்குள் பேசுபொருளாகியிருந்தது. மேலும் திமுகவுக்கும் விசிகவுக்கு இடையில் விரிசல் இருப்பதாகவும் விவாதங்கள் கிளம்பத் தொடங்கின.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். சந்தித்த பிறகு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா பயணம் மேற்கொண்டு, அதை வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு திரும்பியிருக்கும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம். பல்லாயிரகணக்கான முதலீடுகளை ஈர்த்து, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தமிழ் நாட்டுக்கு அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை முடித்திருக்கும் முதல்வர் ஸ்டாலிக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அக்டோபர் 2-ம் தேதி நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக, இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒன்று, தமிழ்நாட்டில் அரசின் மதுபான விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். இரண்டாவது, அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி, மதுவிலக்கை படிப்படியாக அனைத்து மாநில அரசுகளும் கொண்டுவரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாகும். மருத்துவக் காரணங்களுக்காகவே தவிர மற்ற எந்த நுகர்வு போதைப்பொருளும் பயன்பாட்டில் இருக்கக் கூடாது. அதைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான், உறுப்பு 47.
பேரறிஞர் அண்ணா மதுவிலக்கில் உறுதியாகவும், உடும்புப் பிடியாகவும் இருந்தார். இந்திய ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதே கருத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞரும் வலுவாகப் பேசியிருக்கிறார். அதைப் பின்பற்றி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என தி.மு.கவின் 75-ம் ஆண்டு பவளவிழா காணவிருக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கியிருக்கிறோம்.
அந்த மனுவைப் படித்த முதல்வர் ஸ்டாலின், ‘மதுவிலக்கு என்பது தி.மு.க-வின் கொள்கைதான். எனவே, மதுவிலக்கு மாநாட்டில், தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தித் தொடர்பு செயலளர் டி.கே.எஸ் இளங்கோவனும் கலந்துகொள்வார்கள். இதை உங்களுடன் ஒன்றிய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சொல்லி, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. சில நிர்வாக சிக்கலை கவனத்தில் கொண்டு, படிபடியாக அதை நடைமுறைப்படுத்துவோம்’ எனக் கூறியிருக்கிறார்.
அதிகாரத்தில் பங்கு என்பது குறித்தெல்லாம் எதுவும் பேசவில்லை. அது 1999-லிருந்து பேசிவரும் எங்களின் கருத்து. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கையை எப்போதும் நாங்கள் பேசிக்கொண்டுதான் வருகிறோம்… தொடர்ந்து பேசுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எந்த நேரத்தில் எந்த கொள்கையை, கோட்பாட்டை, நிலைப்பாட்டை பேச வேண்டுமோ, அந்த நேரத்தில் அதைப் பேசுவோம்.
இந்த மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களின் கோரிக்கையைதான் இந்த மாநாட்டின் மூலம் முன்னிறுத்துகிறோம். இதைத் திசைதிருப்ப வேண்டாம். இந்த மாநாட்டில் பங்குபெற வேண்டும் என தி.மு.க-வுக்கு நாங்கள் நேரடியாக அழைப்புவிடுக்கவில்லை. ஆனால், முதல்வர் தானாகவே இருவர் பங்கேற்பார்கள் எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தில் உடன்படுபவர்கள் எங்கள் மாநாட்டில் பங்குபெறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் மத்தியில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. எங்கள் கொள்கை நிலைபாட்டில் உறுதியாக நின்று அதை முன்னிறுத்துகிறோம். இது ஒரு கட்சிக்கான பிரச்னை இல்லை. இது எல்லோருக்குமான பிரச்னை. யாரெல்லாம் மது விலக்குக்கு உறுதியாக குரல்கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இதில் பங்கெடுக்கலாம்.
இந்திய ஒன்றிய அரசு இதில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல வேடிக்கை பார்க்கிறது. இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் தீவிரமாக இருக்கிறது. 4 மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் அரசே முன்னின்று மதுவை விற்பனை செய்கிறது. இதில் ஒன்றிய அரசுக்கு பொறுப்பு இருக்கிறதா இல்லையா…
அரசமைப்புச் சட்டம் 44-ன் படி பொது சிவில் சட்டம் கொண்டுவர இந்திய ஒன்றிய அரசுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறும் பா.ஜ.க-வினர், அதேபோல அரசமைப்புச் சட்டம் 47-யைப் பயன்படுத்தி, மது ஒழிப்பு தொடர்பாக ஏன் ஒரு சட்டம் கொண்டுவரக்கூடாது. இதைதான் அண்ணா அன்று வலியுறுத்தினார். அந்த கோரிக்கையைதான் இன்று வி.சி.க முன்னிறுத்துகிறது. இதில் உடன்படுவதால்தான் முதல்வர் ஸ்டாலின் இரண்டு பிரதிநிதிகளை அனுப்ப முன்வந்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.