அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை இரண்டாவது முறையாக கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் வெஸ்ட் பால்ம் கடற்கரையில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில், ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்புக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அவர் பாதுகாப்பாக இருக்கிறார். ட்ரம்ப் செல்லும் வழியில் இருந்த புதரிலிருந்து ஏகே 47 துப்பாக்கியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, என்ன நோக்கம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள், “அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ஃப் கிளப்பில், ட்ரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை குறிவைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். நாங்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள், அந்த நபர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்ல முயன்றார். அவரை துரத்திப்பிடித்து கைது செய்திருக்கிறோம். அவர் பெயர் ரியான் வெஸ்லி ரூத் (58) எனத் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து, சிறப்பு பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளனர்.
இதே போல இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ட்ரம்ப் காயமடைந்தார். இந்த நிலையில், அவர் இருந்த பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.