டெல்லி மதுபானக் கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு நாள்களில் என்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன்.
நீதிமன்றத்தில் எனக்கான நியாயம் கிடைத்துவிட்டது. இப்போது மக்கள் மன்றத்திலும் எனக்கான நீதி கிடைக்கும். மக்களின் தீர்ப்பிற்கு பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். கெஜ்ரிவால் குற்றவாளியா, நிரபராதியா என்பதை மக்களிடன் கேட்க விரும்புகிறேன். நான் நிரபராதியாக இருந்தால் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.
கெஜ்ரிவாலின் அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லி அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ‘மத்தியில் மட்டும்தான் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியுடன் இருப்போம்’ என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் அறிவித்திருக்கிறார்கள். அதனால்தான், டெல்லி, பஞ்சாப், கோவா, ஹரியானா போன்ற சட்டமன்றத் தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன.
இன்னும் சில மாதங்களில், ஹரியானா, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இரு கட்சிகளின் விமர்சனங்களால், இப்போதே அரசியல் களம் தீவிரமடைந்து வருகிறது. இதன் பின்னணியில்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பும் வந்திருக்கிறது.
இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், “அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதே இதை செய்திருக்கலாமே… வெளியே வந்து அவர் ராஜினாமா செய்கிறார் என்றால், அவரின் கட்சியை சார்ந்தவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே பொருள். இப்போது அவர் ராஜினாமா செய்து வேறொருவர் பொறுப்பில் இருந்தாலும், அவரால் பதவியை கட்டுப்படுத்த முடியும். நாடக கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்குள். நம்பிக்கையின்மை நிலவுவதையே இது காட்டுகிறது. ஏற்கெனவே அவரால் டெல்லிக்கு அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தற்போதைய அவரின் இந்த முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ கெஜ்ரிவாலால் சிறையிலேயே முதலமைச்சராக இருந்து ஆட்சியை கட்டுப்படுத்த முடிந்ததென்றால், வெளியிலிருந்து அதை செய்ய முடியாதா” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் முழுக் கவனம் செலுத்தவிருப்பதாகவும், அதுவரை டெல்லியில் தற்காலிக முதல்வராக அவரின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நியமிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருப்பதும் அரசியல் வட்டத்தில் பரபரப்பாகியிருக்கிறது.