`அரசியல் வேண்டாம் என பலமுறை கூறியும் செவிசாய்க்கவேயில்லை’ – கெஜ்ரிவால் முடிவு குறித்து அன்னா ஹசாரே

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் டெல்லியில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச்சில் சிறையிலடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால், இரண்டாவது முறையாக ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இவர் கைதான நாள்முதல், முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்திவந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும்கூட மனுக்கள் குவிந்தது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைப் பதவியிலிருந்து விலகுமாறு கூறமுடியாது என நீதிமன்றம் ஒருபக்கம் தெளிவாகக் கூற, மறுபக்கம் இந்த கைது நடவடிக்கையே பா.ஜ.க-வின் வேலைதான் என்று கூறி பதவியை ராஜினாமா செய்வதில்லை என கெஜ்ரிவால் உறுதியாக இருந்தார்.

கெஜ்ரிவால்

இவ்வாறிருக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த வெள்ளிக் கிழமை திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால், இன்னும் இரண்டு நாள்களில் முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக நேற்று அறிவித்தார். மேலும், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தான் குற்றவாளி இல்லை என்று மக்கள் தீர்ப்பளித்த பிறகு முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரசியல் வேண்டாம் என்ற தன்னுடைய அறிவுரைக்கு கெஜ்ரிவால் செவிசாய்க்கவே இல்லை அன்னா ஹசாரே கூறியிருக்கிறார்.

கெஜ்ரிவாலின் இத்தகைய முடிவு குறித்து பேசியிருக்கும் அன்னா ஹசாரே, “சமூக சேவையில்தான் உண்மையான நிறைவு இருக்கிறது, அரசியலுக்கு வரவேண்டாம் என்று கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே அறிவுரை கூறியிருந்தேன். ஆரம்பத்திலிருந்து பலமுறை இதைக் கூறிவந்தபோதும், என்னுடைய அறிவுரைக்கு அவர் செவிசாய்க்கவே இல்லை. இப்போது நடந்திருப்பது தவிர்க்க முடியாதது. கெஜ்ரிவாலின் மனதில் என்ன இருக்கிறது என்பதை என்னால் அறிய முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

அன்னா ஹசாரே

இதே அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட போதுகூட, “ஒரு காலத்தில் என்னுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்த கெஜ்ரிவால், தற்போது மதுபானக் கொள்கைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய கைது என்பது அவரால் ஏற்பட்ட விளைவே” என்று கூறியிருந்தார். முன்னதாக, 2011-ல் அன்னா ஹசாரே முன்னெடுத்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கெஜ்ரிவாலும் இணைந்து போராடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY