Andhra: நடிகை கைது விவகாரம்; மூன்று IPS அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சந்திரபாபு நாயுடு!

இந்தி, மலையாளம், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி மொழியிலும் சில படங்களில் நடித்தவர் நடிகை காதம்பரி ஜெத்வானி. இவர் தமிழில் நடித்த ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில், “என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற பிரபல தொழிலதிபர் ஒருவர், முந்திக்கொண்டு எங்களுக்கு எதிராக ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் குக்கல வித்யாசாகர் மூலம் எங்களுக்கு எதிராக ஆந்திராவில் வழக்குப்பதிவு செய்யக் கேட்டுக்கொண்டார்.

நடிகை காதம்பரி ஜெத்வானி |

அதைத் தொடர்ந்து, விஜயவாடா காவல்துறை, கடந்த பிப்ரவரி மாதம் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று, 3 நாள்கள் சித்ரவதை செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் துன்புறுத்தினார். 48 நாள்களுக்கு பிறகு நாங்கள் சிறையிலிருந்து வெளியே வந்தோம். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசிடம் ஆன்லைனில் புகாரும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆந்திர மாநில சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, இதற்கென ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. மேலும், நடிகை காதம்பரி ஜெத்வானியை துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் YSRCP தலைவர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ்/சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், நடிகையை பொய்யான புகாரின் கீழ் கைது செய்து துன்புறுத்தியதாக கூறப்படும், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான முன்னாள் உளவுத்துறை தலைவர் பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் போலீஸ் கமிஷனர் கிராந்தி ராணா டாடா, விஜயவாடா முன்னாள் துணை கமிஷனர் விஷால் குன்னி ஆகியவர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கையொப்பமிட்டு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களுக்கு முன்னர் இதே வழக்கில் உதவி கமிஷனர் ஹனுமந்து ராவ், இப்ராஹிம்பட்டினம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சி.சத்தியநாராயணா ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.