Israel: `15 நிமிடங்களில் 2000 கி.மீ தூரம் பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை’ – தாக்குதலின் பின்னணி என்ன?

இன்று காலை, இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி அமைப்பு.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். அன்றிலிருந்து பல தாக்குதல்கள், உயிர்பலி ஆகியவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில், இன்று காலை ஹூத்தி அமைப்பு ஏமன் நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹூத்தி அமைப்பு ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது என்பதும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு ஏமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – ஏமன் தாக்குதல்

இந்த ஏவுகணை ஏமன் நாட்டிலிருந்து 15 நிமிடங்களில் கிட்டதட்ட 2,000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இஸ்ரேல் நாட்டை தாக்கியுள்ளது. ஏவுகணையில் இருந்து எழுந்த சைரன் சத்தத்தை கேட்டவுடன், தாக்குதல் ஆன இடத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து ஓடி வெளியேறி உள்ளனர்.

முக்கியமாக, ஏவுகணை திறந்தவெளியில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிய மக்களில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அருகில் இருந்த ரயில் நிலையத்தின் எஸ்கலேட்டர் சேதம் அடைந்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், “பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை தடுக்கக்கூடிய Iron Dome ஏன் செயல்படவில்லை என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என்று கூறியுள்ளது.