Thirumavalavan: டெலிட் செய்யப்பட்டு மீண்டும் பதியப்பட்ட வீடியோ; நடந்தது என்ன? – திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ட்வீட்டர் பக்கத்தில், ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்த வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு, டெலிட் செய்யப்பட்டு, மீண்டும் பதிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் இதுகுறித்துப் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். அதுவே கூட்டணிக்குள் பேசுபொருளாகியிருந்தது. மேலும் திமுகவுக்கும் விசிகவுக்கு இடையில் விரிசல் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இந்த நிலையில், வீடியோ ஏன் டெலிட் செய்யப்பட்டது, மீண்டும் ஏன் பதிவிடப்பட்டது, இரண்டுக்கும் நடுவில் நடந்தது என்ன என்பதை விளக்கமாகப் பேசியுள்ளார் திருமாவளவன்.

திருமாவளவன்

பிழையைச் சரி செய்வதற்குள் பேச்சு பொருளாகிவிட்டது…

“என்னால் எல்லா நேரமும் போஸ்ட் செய்ய முடியாது. வீடியோ பதிவு செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டது, நான் டெல்லியில் இருக்கும்போது ஒரு பத்திரிகையாளர் ஃபோனில் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

மதுரைக்கு வந்ததும் இதுபற்றிப் பேசுகிறேன் என அவரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் மதுரையில் பல நிகழ்ச்சிகளில் சிக்கிக்கொண்டேன்.

எனது வலைத்தள பக்கத்தை நிர்வகிக்கும் தோழர்களிடம் கேட்டபோது, அதில் எழுதியிருந்த வாக்கியம் முழுமை பெறாமல் இருந்தது தெரியவந்தது. அந்த தோழர், ‘முதலில் பதிவிட்டபோது வாக்கியங்களில் பிழை இருந்தது. டெலிட் செய்து திருத்துவதற்குள் பேச்சு பொருளாகிவிட்டது. உங்கள் (திருமாவளவன்) வழிகாட்டுதல்களைக் கேட்டுக்கொண்டு பதிவிடலாம் எனத் தாமதித்தேன்’ என்றார்… பின்னர் நான் சொல்லி மீண்டும் பதிவிட்டார்” எனக் கூறினார் திருமாவளவன்.

ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!

அந்த வீடியோவில் திருமாவளவன் பேசியதாவது:- 

“இதற்கு முன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியென யார் குரலை உயர்த்தியிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் 2016 லேயே கூட்டணி ஆட்சி வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். அமைச்சரவையில் அதிகாரப் பகிர்வு வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கும் இடப்பகிர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும்.

தமிழகத்தில் இதற்கு முன் எந்த இயக்கமும் இப்படிப் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தால்தான் கூட்டணி பேசச் சென்ற போது மூப்பனாருக்கு என்னை நிறையவே பிடித்துப் போனது.

விடுதலை சிறுத்தைகள்

தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்கிற முழக்கத்தை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!’ என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே.” என்றார்.

புதிய பதிவில், ஒரு மணி நேர முழு உரையையும் இணைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs