திமுக பிரமுகர் பெண் குறித்த சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு

திமுகவில் பட்டுக்கோட்டை நகர துணைச் செயலாளராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் நகரச் செயலாளர் செந்தில்குமாரின் ஆதரவாளர்.

ஆர்.எஸ்.பி.ராஜா என்பவர் அவ்வப்போது நகராட்சியில் முறைகேடு நடப்பதாக தன் முகநூல் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அவருடைய பதிவு கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தும். இந்தநிலையில் ஆர்.எஸ்.பி.ராஜா நேற்று ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். ராமகிருஷ்ணன் செல்போனில் எதிர்முனையில் ஒருவருடன் பேசுகிறார்.

பட்டுக்கோட்டை

அந்த உரையாடலில், `ராமகிருஷ்ணன், எங்கே இருக்குற!’ எனக் கேட்கிறார், அதற்கு எதிர்முனையில் பேசுபவர், `உங்க ஆபிஸ்க்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார். அவரிடம் `லேடீஸ் ஏதும் இருக்கா’ எனக் கேட்கிறார் ராமகிருஷ்ணன். அந்த நபர், `இருக்கு தனியார் வங்கியின் மாடியில் உள்ள வீட்டில் வயதான பெண் ஒருவர் நடத்துகிறார். அந்த பெண் எந்த ஏரியா, இங்கு வருவாளா என்பதாகக் கேட்கிறார். இப்படியாக ஆளும்கட்சி பிரமுகரின் சர்ச்சையான உரையாடல் ஆடியோவை ஆளும் கட்சியை சேர்ந்தவரே வெளியிட்டது திமுக வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டையில் சில குடியிருப்புப் பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக அவ்வப்போது புகார் எழும். ஆனால் போலீஸ் அதைத் தடுக்க போதிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இந்தநிலையில் பாலியல் குறித்து வெளியாகிருக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக இது குறித்த விபரம் அறிந்தவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இது குறித்து ராமகிருஷ்ணனிடம் பேசினோம், `ஆர்.எஸ்.பி.ராஜா திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் மீது வழக்கு உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சில் ஆடியோவை எடிட் செய்து பொய்யாக பதிவிட்டுள்ளார். எனக்கு குடும்பம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை’ என்றார்.