சமையல் எண்ணெய் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சோயா விவசாயிகள் சமீபத்தில் அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதமே, மத்திய அரசு சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.
சோயாபீன, சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் சுங்க வரி தற்போது 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா தனது 70 சதவிகித எண்ணெய் தேவையை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. இந்தியாவுக்கு, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா, ருமேனியாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் நாட்டில் எண்ணெய் விதைகள் உற்பத்தி குறைந்து, எண்ணெய் விதைகள் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாம், சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களின் சுங்க வரியை 20 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியது. இது இந்திய விவசாய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் வரி, சமூக நல கூடுதல் கட்டணங்களை வைத்து பார்க்கும்போது மொத்த இறக்குமதி வரி 5.5 சதவிகிதத்தில் இருந்து 27.5 சதவிகிதமாக உயரும். மேலும் பாம், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களின் இறக்குமதி வரி இனி 13.75 சதவிகிதத்தில் இருந்து 35.75 சதவிகிதமாக மாறும்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “இந்திய விவசாயிகளின் நலனை பாதுகாக்கவே இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் வித்து பயிரிடும் விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்காகவும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில், விவசாயிகளுக்கு ஓரளவு நன்மை கிடைத்தாலும், மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். பொதுவாக பாமாயில் எண்ணெய் ஏழை மற்றும் நடுத்தர வீடுகளில்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். வரி விகிதம் உயர்வால் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு ரூ.25 வரை அதிகரிக்கும். பாமாயில் விலை உயர்ந்தால் நிச்சயம் மக்களின் பொருளாதார சூழல் பாதிக்கும். மேலும், பல்வேறு உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்து விடும். இதன் இன்னொரு பக்கத்தை பார்த்தால், எண்ணெய் தேவை குறைக்கப்படும். முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது மிகவும் குறையும்.” என்றனர்.