Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா… தாக்குதலுக்குத் திட்டமா? – பரபரக்கும் தகவல்!

ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் மீது 11 செப்டம்பர் 2001 அன்று இவர் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். பிறகு இவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இவரின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனப் பேசிய ஆடியோ, வீடியோ செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து, 2019-ல் நடந்த விமான தாக்குதலில் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி, உலக நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹம்சா பின்லேடன் தனது சகோதரர் அப்துல்லாஹ்வின் உதவியோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து அல்கொய்தாவை ரகசியமாக நடத்தி வருகிறார் என “The mirror” உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த அறிக்கையில், NMF, தாலிபன், ஹம்சா மற்றும் அவரது கூட்டாளிகளின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்படுகிறது.

மேலும், “2021-ல் காபூலில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியப் பிறகு, ஆப்கானிஸ்தான் பல்வேறு பயங்கரவாத குழுக்களின் பயிற்சி மையமாக மாறியிருக்கிறது. ஹம்சா பின்லேடன், ஆப்கானிஸ்தானின் கேல் மாவட்டத்தில் இருக்கிறார். அங்கு 450 அரேபியர்களும், பாகிஸ்தானியரும் அவரை பாதுகாத்து வருகின்றனர். அவரது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஹம்சா பின்லேடன் அமெரிக்காவால் அதிகாரபூர்வமாக உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.