“அவரே விரும்பி மன்னிப்பு கேட்டார்.. பாஜக, அமைச்சர் தரப்புக்கு பங்கு இல்லை” -சொல்கிறார் ஹெச்.ராஜா

தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமையில், தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மையக்குழுவின் கூட்டம் திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாடு பா.ஜ.க-வின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மையக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் குறித்தான திட்டமிடல் நடைபெற்றது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான அடையாளமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகை தந்து அந்த பணிகளை ஆய்வு செய்தது இருந்தது.

ஹெச்.ராஜா

தமிழக அரசு தாமதமில்லாமல் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால் நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெறும் என்கிற கருத்து இருக்கிறது. மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும். மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது. மத்திய அரசின் விஷ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசுகளில் வெளியிடவில்லை. வரும் 17 -ஆம் தேதி விஷ்வகர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால் தொழில் செய்யும் அமைப்பான விஷ்வகர்மாவை சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்.

புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை…

36 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை.

வெண்ணெய்க்கு வரி ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இருந்தது. ஜி.எஸ்.டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலினை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.

கோவை அன்னபூர்ணா பிரச்னை

கோவை அன்னபூர்ணா உணவக அதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அந்த உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பா.ஜ.க-விற்கும், நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை. அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ அவரின் அனுமதியுடன் எடுக்கப்பட்டதா என்று கேட்கிறீர்கள். ‘அப்பத்தாவிற்கு வரி.. அம்பானிக்கு வரி இல்லை’ என பேசுவது முட்டாள் தனமான பேச்சு. மத்திய அரசுக்கு எதிரான கருத்து உருவாக்கத்தை செய்யக்கூடியது. அந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும்.

இது செய்தியாளர் சந்திப்பு. நீதிமன்றம் அல்ல. குறுக்கு விசாரணையும் அல்ல. இந்தியாவிற்கு விரோதமாக வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ‘ஆன்டி இந்தியன்’. அவர் அமெரிக்கா சென்று இந்தியாவிற்கு எதிராக இருக்கக்கூடிய நபர்களுடன் கலந்துரையாடினார். அப்படிப்பட்ட ராகுல் காந்தி குறித்து நாம் பேச வேண்டாம்.

மது மாநில பட்டியலில் உள்ளது..

திருமாவளவன் கட்சியும் ஜாதி கட்சி தான். அவர் மற்ற கட்சியை ஜாதி கட்சி, மத கட்சி என கூறுவது எந்த வகையில் பொருந்தும்?. மது என்பது மாநில பட்டியலில் இருப்பது தான். இது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென்றால் மதுவை ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அப்போது தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.

திருமாவளவன்

வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு என திருமாவளவன் கூறுவது அனைத்து இடங்களிலும் தனக்கான கதவு திறந்து உள்ளது என தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்கும் யுக்தியாக பயன்படுத்தலாம் என நினைத்திருக்கலாம்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் ஒரு மதுக்கடையை கூட குறைக்கவில்லை. மூன்று நாள்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்தது. இவையெல்லாம் போதை தாக்கத்தின் காரணமாக தான் நடந்தது. தமிழகத்தை சீரழிக்க கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம். அது நடக்கும்.

ஜாதி மற்றும் தொழில் குறித்து கண்ணபிரான் கீதையில் கூறியது தான் வள்ளுவர் திருக்குறளிலும் கூறியுள்ளார். கண்ணபிரான் சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்துள்ளேன். அதை தகுதி மற்றும் தொழிலின் அடிப்படையில் வரிசைப்படுத்தி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இதையே திருவள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என குறிப்பிட்டுள்ளார். வள்ளுவன் கூறியதும் கண்ணன் கூறியதும் ஒன்றுதான்” என்றார்.