‘இன்னும் இரண்டு நாள்களில் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் இன்று அவர் தனது கட்சி மீட்டிங்கை கூட்டி பேசியுள்ளார். அதில், “இரண்டு நாள்களில் என்னுடைய முதலமைச்சர் பதிவியை ராஜினாமா செய்யப்போகிறேன். இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன்.
நீதிமன்றத்தில் எனக்கான நியாயம் கிடைத்துவிட்டது. இப்போது மக்கள் மன்றத்திலும் எனக்கான நீதி கிடைக்கும். மக்களின் தீர்ப்பிற்கு பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். கெஜ்ரிவால் ‘குற்றவாளியா, நிரபராதியா?’ என்பதை மக்களிடன் கேட்க விரும்புகிறேன். நான் நிரபராதியாக இருந்தால் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்” என்று பேசியுள்ளார். டெல்லியில் சட்டசபை தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவிற்கு பின்னால், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும், “நான் கைதானதால் ராஜினாமா செய்யவில்லை. ஜனநாயகத்தை காக்க ராஜினாமா செய்கிறேன். நரேந்திர மோடி பிரிட்டிஷ் ஆட்சியை விட சர்வதிகாரமாக நடந்துக்கொள்கிறார். என்னை மட்டுமல்ல…கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் வழக்குப் பதிந்துள்ளனர். அவர்கள் வழக்கு பதிந்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்பதில்லை. இது அவர்களது புதிய விளையாட்டு” என்றும் பேசியுள்ளார்.