Tamil News Live Today: அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி, அமெரிக்காவுக்கு அரசுமுறை முதலீட்டு ஈர்ப்பு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர், பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்துக் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து இந்த மாதம் 2-ம் தேதி சிகாகோவுக்குச் சென்றவர், ஏராளமான தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல, அமெரிக்க வாழ் தமிழர்கள், சங்கங்கள் மற்றும் அமைப்பினரைச் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்கப் பயணத்தில், 7,616 கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தங்கள் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், தனது 17 நாள்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று (14-09-2024) சென்னை திரும்புகிறார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் பலத்த வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.