பிரதமர் மோடியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று சுபத்ரா யோஜனா திட்டம். 18-60 வயதுடைய தகுதியுடைய அனைத்துப் பெண்களுக்கும், ஐந்தாண்டுகளுக்கு ரூ.10,000 என ரூ.50,000 வழங்கப்படும். இந்த திட்டத்தை செப்டம்பர் 17-ம் தேதி பிரமாண்டமாக தொடங்க ஒடிசா அரசு தயாராக உள்ளது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற, நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் ஆதாரை புதுப்பிக்கவும், அதனுடன் செல்போன் எண்ணை இணைக்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகிவருகிறது.
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பது, சுபத்ரா திட்டத்தில் பயன்பெற முக்கிய நிபந்தனை என்பதால், ஓடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தின் நுவாடா பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், மனைவியின் நகையை அடமானம் வைத்து, புதிய செல்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். மேலும், அதற்காக புதிய சிம் கார்டையும் வாங்கியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், “என்னிடம் இருந்த பணத்தில் செல்போன் வாங்க முடியாது என்பதால், என் மனைவியின் நகையை அடகு வைத்து புதிய செல்போன் வாங்கினேன். அரசு எங்களுக்கு உதவுவது நல்லதுதான், ஆனால் செல்போன் வேண்டும், செல்போன் எண்ணை ஆதருடன் இணைக்க வேண்டும் எனப் பல விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் ஏழைகள். இவ்வளவு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது சிரமமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.