மகாராஷ்டிரா: நெருங்கும் தேர்தல்; ஆதரவாளர்களைத் தக்கவைக்க ஷிண்டேவின் `திட்டம்!’

மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சிவசேனா (உத்தவ்) தலைமையிலான மகாவிகாஷ் அகாடி படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக தொகுதிப் பங்கீட்டை பேசி முடித்து வருகிறது. அதே போன்று பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. சமீபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் உத்தவ் தாக்கரேயை தொடர்பு கொண்டு தாங்கள் மீண்டும் உத்தவ் அணியில் சேர விருப்பம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் வேலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தீவிரம் காட்டி வருகிறார்.

ஹேமந்த் கோட்சே

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனா (ஷிண்டே) வை சேர்ந்த பல எம்.பி-க்கள் தோல்வியைத் தழுவினர். சிலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சியில் சேரும் அபாயம் இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாவ்னா காவ்லி மற்றும் கிர்பால் துமானே ஆகியோர் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். ஹின்கோலி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஹேமந்த் பாட்டீலும் தனக்கு சட்டமேலவை உறூப்பினர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் நாசிக் தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா எம்.பி ஹேமந்த் கோட்சே தோல்வியை தழுவினார். அந்த தொகுதியை முதல்வர் ஏந்காத் ஷிண்டே போராடி தனது கட்சிக்கு வாங்கினார்.

அதில் அமைச்சர் சகன் புஜ்பால் போட்டியிடுவதாக இருந்தது. பா.ஜ.க-வும் சகன் புஜ்பாலுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் சிவசேனா அத்தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது. தேர்தலில் ஹேமந்த் கோட்சே தோல்வி அடைந்திருப்பதால் அவரும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஹேமந்த் பாட்டீலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த மற்றொரு சிவசேனா எம்.பி ராகுல் ஷெவாலே டெல்லியில் கட்சிப் பணிகளை கவனித்து வருவதால் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். ஷீரடி தொகுதியில் தோல்வி அடைந்த சிவசேனா எம்.பி சதாசிவ் லோகண்டே மற்றும் கோலாப்பூர் தொகுதியில் தோல்வி அடைந்த சஞ்சய் மண்ட்லிக் ஆகியோரையும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்க முதல்வர் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.