கோவை அன்னபூர்ணா விவகாரம்; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி – பின்னணி தகவல்!

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் பிரச்னை அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக-வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கோவை அன்னபூர்ணா பிரச்னை

மறுபக்கம் பாஜக-வின் உள்கட்சி பிரச்னையும் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக-வின் கோவை, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி குறித்து பாஜக-வில் விசாரித்தோம், “அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பாஜக-வினர் தான் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதற்கு அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டுவிட்டார். வானதி சீனிவாசனும், ‘அந்த வீடியோ யார் எடுத்து பரப்பினார்கள் என தெரியவில்லை’ என்றே கூறியிருக்கிறார்.

அண்ணாமலை வானதி சீனிவாசன்

இந்நிலையில் சதீஷ், ‘கோவை மாவட்ட நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தான் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.’ என வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு கட்சிக்காரர்கள் மத்தியில் வேகமாக பரவியது. ஏற்கெனவே அன்னபூர்ணா விவகாரத்தில் சீனியர்களிடையே பஞ்சாயத்து நிலவி வருகிறது. ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பாஜக-வினரே  வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சதீஷ்

அதனால் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவின் அடிப்படையில் சதீஷை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.” என்றனர்.