US Election: தொலைக்காட்சி விவாதத்தில் `வென்ற’ கமலா ஹாரிஸ் தேர்தலில் வெல்வாரா?

( கட்டுரையாளர்,  மணிவண்ணன் திருமலை, லண்டன் பிபிசி உலக சேவை, முன்னாள் ஆசிரியர்)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 50 நாட்களே உள்ள நிலையில்,  பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் – டொனால்ட் ட்ரம்ப்  இருவரும் கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாதத்துக்குப் பின்,  தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

சுமார் 67 மில்லியன் மக்கள் பார்த்திருப்பதாகக் கணிக்கப்படும் இந்த ஏபிசி தொலைக்காட்சி சானல் விவாதம்,  ஜூலையில், பைடைன் தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கியதும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸின் அரசியல் செல்வாக்கை சற்று உயர்த்தியிருக்கிறது.

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்திற்கு பின் , விவாதத்தைப் பார்த்தவர்கள் மத்தியில் சி.என்.என் சானல் நடத்திய கருத்துக்கணிப்பு, மற்றும்  பதிவு செய்த வாக்காளர்கள் மத்தியில் யூகவ் (YouGov) என்ற கருத்தறியும் அமைப்பும் நடத்திய இரு வெவ்வேறு கருத்துக் கணிப்புகளிலும் கமலா ஹாரிஸே வென்றதாக முடிவுகள் சொல்கின்றன.

ஆனால் தொலைக்காட்சி விவாதங்களில் பெற்ற வெற்றி, தேர்தல் வெற்றியாக மாறுமா ?  

கடந்த காலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களிடையே நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் வென்றதாகக் கருதப்பட்டவர்கள் சிலர், தேர்தலில் தோற்றிருக்கிறார்கள்.  

ஆனாலும்,  தொலைக்காட்சி விவாதம் என்பதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு முக்கியத்துவம் உண்டு.  

கணிசமான வாக்காளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக அல்லது அனுதாபிகளாக இருக்கும் நிலையில், தொலைக்காட்சி விவாதங்கள் அவர்கள் வாக்களிக்கும் நிலைப்பாட்டை மாற்றுவதில்லை. 

ஆனால் கட்சி சாராதோர் இந்த விவாதங்களைப் பார்க்கும் போது,  அவர்கள் வாக்களிக்கும் முடிவுகளை இந்த விவாதங்கள் ஓரளவுக்கு மாற்றுகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

ட்ரம்ப் போன்ற ஏற்கனவே நன்கு அறிமுகமான வேட்பாளர்களுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பெரிய பலன் இல்லை;  ஆனால் முதல் முறை போட்டியிடும் புதிய வேட்பாளர்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள இந்த விவாதங்கள் உதவுகின்றன என்று கருதப்படுகிறது. 

தொலைக்காட்சி விவாதத்தில் என்ன நடந்தது ? 

ஆதாரங்கள் இல்லாத பல கருத்துகளை அடித்துவிடுபவர் என்று பரவலான ஒரு இமேஜ் கொண்ட ட்ரம்ப் இந்த விவாதத்திலும் பல சர்ச்சை கருத்துகளை முன்வைத்தார்.  

 அமெரிக்காவின் பல பொருளாதாரப் பிரச்னைகளுக்கு சட்டவிரோத குடியேறிகள்தான் காரணம் என்று நம்பும் வலதுசாரி வாக்காளர்களுக்கு தீனி போடும் வகையில்,  பைடன் ஆட்சியில் இந்தப் பிரச்னை கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டினார்.  

ஒஹையோ மாகாணத்தின் ஸ்ப்ரிங்க்ஃபீல்ட் நகரில் , ஹெய்த்தி நாட்டிலிருந்து வந்த குடியேறிகள், நகர மக்களின் நாய்களையும், பூனைகளையும் கொன்று சாப்பிடுகிறார்கள் என்று முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய ஆதாரமற்ற செய்தியை ட்ரம்ப் தெரிவித்தது,  பெரும் ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.  

ட்ரம்ப்

நெறியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும், ட்ரம்ப் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  “ நாம் கண்டுபிடிப்போம்” ( “We will find out”)  என்று வழுக்கலாக பதிலளித்தார். 

தொலைக்காட்சி விவாதத்தில் கமலா ஹாரிஸ் காட்டிய ஆக்ரோஷம் மற்றும் ட்ரம்ப்பை அவர் எதிர் கொண்ட விதம் ஆகியவை அவரது தரப்புக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றன. 

இது விவாதம் முடிந்த அடுத்த 24 மணி நேரங்களில் கமலா ஹாரிசுக்கு குவிந்த நிதியில் அளவிலேயே காணக்கூடியதாக இருந்தது – இந்தக் குறுகிய கால கட்டத்தில் கமலா ஹாரிஸ் சுமார் 47 மிலியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அவரது தேர்தல் பிரசாரக்குழு தெரிவித்திருக்கிறது.

மணிவண்ணன் திருமலை, மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை

பிரகாசமடைந்திருக்கும் வாய்ப்பு

பைடன் களத்தில் இருந்த வரை தொய்வில் இருந்த ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகள் கமலா ஹாரிஸ் வருகைக்கு பின் பிரகாசமடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.  

அதிபர் ஜோ பைடன் கடந்த ஜுன் மாதம் ட்ரம்ப்புடன் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் சுணங்கிவிட்டார் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில்,  அவர் போட்டியில் இருந்து விலகவேண்டும் என்று அவரின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த புள்ளிகளே அழுத்தம் தர, அவர் போட்டியில் இருந்து விலகியதுடன், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ்

இந்த திடீர் திருப்பத்தை ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை.  தன்னைவிட வயதில் மூத்தவரான ஜோ பைடனை, வயது,  ஆட்சிக்காலத்தில் அவர் செயல்பாடுகள் ஆகிய இரண்டைக் காட்டியே தோற்கடித்துவிடலாம் என்று அவர் போட்ட திட்டம், ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கையால் குலைந்து போனதை அவர் ரசிக்கவில்லை. 

பைடனை முன் வைத்து தீட்டப்பட்ட தேர்தல் யுக்திகளை கமலா ஹாரிஸ் வேட்பாளரான நிலையில் மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ட்ரம்ப்.  

தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது,  பைடனின் ஆட்சியில் பொருளாதாரம் வளரவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார் ட்ரம்ப்.  பைடன் மீது வைத்த இந்த குற்றச்சாட்டு அவரது நிர்வாகத்தில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசுக்கும் பொருந்தும் என்பது அவர் வாதம். 

கமலா ஹாரிஸ்

இதே போலத்தான் அமெரிக்காவின் வலது சாரிகள் மையப்படுத்தும்,  சட்டவிரோதக் குடியேற்றங்கள் பிரச்னையும்.  

மெக்சிகோவிலிருந்து குடியேறிகள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவரெழுப்பும் திட்டத்தை நிறைவேற்ற முயன்ற ட்ரம்ப், ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.

அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள மெக்சிகோ,  மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான குவாடிமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுவதைத் தடுக்க ஜோ பைடன் கமலா ஹாரிசுக்கு வழங்கிய சிறப்புப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற கமலா தவறிவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

குடியேற்றப் பிரச்னை அமெரிக்காவில் ஒரு அரசியல் ரீதியாக கொந்தளிப்பை ஏற்படுத்தும் விஷயம். எனவே இதை கமலா உடனடியாக மறுத்து,  அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் பல கோரிக்கைகளை ஏற்று ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்த குடியேற்ற  தடை சட்டத்திற்கு டிரம்ப் முட்டுக்கட்டை போட்டதாக பதிலடி கொடுத்தார். 

குடியேற்றம் , பொருளாதாரம், விலைவாசி உயர்வு ,  போன்ற உள் நாட்டுப் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க ரஷ்யா – உக்ரெயின் போர்,  இஸ்ரேல் – காசா போர் ஆகியவையும் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களும் எதிர்கொள்ளும் முக்கிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளாக இருக்கின்றன.

புடின் – ட்ரம்ப் நட்பு

ரஷ்ய அதிபர் புடினுடன் ட்ரம்ப்புக்கு உள்ள நெருக்கத்தை சுட்டிக்காட்டும்  ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் உக்ரேனுக்கு அமெரிக்கா இது வரை அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வார்,  ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகர் கீய்வுக்குள் வந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள். 

தான் ஆட்சியில் இருந்திருந்தால் புட்டின் மாஸ்கோவிலேயே இருந்திருப்பார், உக்ரேனுக்குள் கால் வைத்திருக்க மாட்டார் என்று ட்ரம்ப் பதிலளித்திருக்கிறார்.

இஸ்ரேல் காசா பிரச்னையைப் பொறுத்தவரை,  இரு தரப்பினரின் நிலைப்பாட்டிலும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும்,  கமலா ஹாரிஸ் பாலத்தீனர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

கடுமையான களம்

அமெரிக்காவில் அரபு – அமெரிக்கர்கள் அதிகம் வாழும் மிச்சிகன் மாகாணத்தில் பைடனின் இஸ்‌ரேல் ஆதரவுக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரபு அமெரிக்கர்கள் பைடனுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்த நிலை, கமலா ஹாரிஸ் களத்தில் வந்த பின்னர் சற்று மாறியிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் என்னவோ மிகவும் கடுமையான போட்டியையே இம்முறை சந்திக்கிறது என்றே தெரிகிறது.

கமலா ஹாரிஸ் தற்போதைக்கு கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கிறார் என்றாலும்,  அமெரிக்க அதிபர் தேர்தலில், மொத்த வாக்குகள் அடிப்படையில் மட்டும் தேர்தல் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பெரும்பான்மையான மாநிலங்களையும் வென்று அதன் மூலம் அந்த மாநிலங்கள் பெற்றிருக்கும் “தேர்ந்தெடுப்போர் அவை”யையும் ( Electoral College)  வெல்ல வேண்டும்.  

இந்தத் தேர்ந்தெடுப்போர் அவை உறுப்பினர்கள்தான்,  தேர்தல் முடிந்த பின் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள்.  அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு “மறைமுகத் தேர்தல்” ( indirect election) தான். 

இந்த தேர்ந்தெடுப்போர் அவையில் மொத்தம் 538 பேர் உறுப்பினர்கள். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட ஒரு வேட்பாளர் குறைந்த பட்சம் 270 உறுப்பினர்களை வென்றிருக்கவேண்டும். 

கடந்த 2000 மற்றும் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் வென்ற ஜார்ஜ் புஷ் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே மொத்த வாக்குகளில் குறைவான வாக்குகளையே பெற்றாலும்,  அதிக மாநிலங்களில் வென்றதால்  அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றனர் என்பது தெரிந்த விஷயம்.  இது அமெரிக்க தேர்தல் அமைப்பில் உள்ள ஒரு  அடிப்படை முரண்.

ட்ரம்ப் எதிர்கொள்ளும் வழக்குகள் தேர்தலில் அவரது வாய்ப்புகளைப் பாதிக்குமா ? 

கடந்த சில ஆண்டுகளில் ட்ரம்ப் மீது போடப்பட்ட நான்கு  முக்கிய வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கனவே அவர் குற்றவாளியென்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  2016 தேர்தலுக்கு முன்னர், ஒரு பெண்ணுக்கு அவருடன் பாலியல் தொடர்பு இருந்த விவகாரத்தில் ட்ரம்ப் , அவரை “சரிக்கட்ட”  பணம் கொடுத்து அந்த பணத்தை தன் நிறுவனத்தின் வேறு ஒரு கணக்கில் எழுதிவைத்தார் என்ற வழக்கு அது.  

இவ்வழக்கில் தண்டனைக் காலம் பற்றிய உத்தரவு தேர்தல் முடிந்த பின்னர்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதி முடிவு செய்திருப்பது ட்ரம்ப்புக்கு ஆறுதலளிக்கும் ஒரு விஷயம். 

மற்ற மூன்று வழக்கு விசாரணைகளை ட்ரம்ப் தரப்பு வெற்றிகரமாக  தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட்டிருக்கிறது. 

எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த வழக்குகளால் ட்ரம்ப் எந்த ஒரு சிக்கலையும் எதிர்கொள்ளப்போவதில்லை. 

தேர்தலுக்கு பின்னர், இந்த வழக்குகளில் அவருக்கு சிக்கல் வருமா, அல்லது தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அவரே சட்டத்துறையை இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளச் சொல்வாரா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயங்கள்.

தேர்தலில் ட்ரம்ப் வென்று,  வழக்குகள் சிலவற்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அவர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.  

ஆனால் அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஒரு குற்றவாளி  அல்லது சிறைத்தண்டனை பெற்றவர் அதிபர் பதவி வகிக்கமுடியாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்ற விநோதமான விஷயம் பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது.   அமெரிக்க அரசியல் சட்டத்தின் பிதாமகர்கள் இந்த நிலையை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY