TVK Vijay: தள்ளிப்போகும் `த.வெ.க’ மாநாடு?! – பின்னணி என்ன?

செப்டம்பர் 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுமென சொல்லப்பட்ட நிலையில், அதனை ஒத்திவைப்பதாக முடிவெடுத்திருக்கிறார் கட்சித் தலைவர் விஜய் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டை திட்டமிட்ட தேதியில் நடத்தாமல் தள்ளிவைத்ததன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

த.வெ.க கொடி

நம்மிடம் பேசிய த.வெ.க-வினர் சிலர், “செப்டம்பர் 23-ம் தேதி மாநாட்டை நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாகவே இருந்தார் தலைவர் விஜய். செப்டம்பர் 1-ம் தேதி பணியை தொடங்கிவிடலாம் என்ற நோக்கில்தான் ஆகஸ்ட் இறுதியில் விழுப்புரம் எஸ்.பியிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்தார் பொதுச் செயலாளர் ஆனந்த். ஆனால் காவல்துறை 21 கேள்விகளை எழுப்பவே, அதற்கு செப்டம்பர் 6-ம் தேதி பதிலளித்தது த.வெ.க. தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி பார்கிங் உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் காவல்துறையின் அனுமதி கிடைப்பதிலேயே 8 நாட்கள் ஓடிவிட்டன. அதன்பிறகு மாநாட்டு வேலைகளை தொடங்கியதால் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் முடிக்க முடியாதென பேச்சு கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

தலைமை கழகத்தினரின் ஆலோசனையில் `முதல் மாநாடு எக்காரணத்தைக் கொண்டும் சொதப்பிவிடக் கூடாது, தள்ளிவைத்தாலும் சிறப்பாகவே நடத்த வேண்டும்’ என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள். மாநாடு தள்ளிப்போக காவல்துறையின் நெருக்கடியும் ஒரு காரணம், ஆகவே நிபந்தனைகளை தளர்த்திக் கொள்ளவும் கோரிக்கை வைக்கவுள்ளோம்” என்றனர்

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

கட்சியின் உள்விவகாரமறிந்த சிலரோ, “மாநாட்டு தள்ளிப்போவதற்கு காவல் துறையின் நெருக்கடி எனச் சொல்லி சமாளித்தாலும் நிதர்சனத்தில் மாநாட்டை ஒருங்கிணைக்கும் அளவுக்கான அனுபவசாலிகள் கட்சியில் இல்லை என்கிறார்கள். பிப்ரவரி மாதமே விஜய் கட்சி தொடங்கிய நிலையில் கட்சியின் கொள்கை விளக்க குறிப்பு, மாநாட்டு கூட்டத்தை ஒருங்கிணைப்பத்தில் சிக்கல் என்பதெல்லாம் ஏற்கமுடியாத காரணங்கள். திடலை தயார் செய்து பந்தல் அமைக்கும் பணிகளுக்கு காவல்துறை அனுமதி கொடுத்த செப்டம்பர் 8-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை என்பது போதுமான கால அளவுதான்” என்கிறார்கள்

மேலும் தொடர்ந்தவர்கள், “ஜனவரியில் மாநாட்டை நடத்தி, தீவிர அரசியலில் கட்சியை ஈடுபடுத்தினால் நல்ல ஓப்பனிங் இருக்குமென கருதுகிறது விஜய்யின் ஆலோசனை குழு. ஆனால் அவ்வளவு நாட்கள் தள்ளிப்போட விஜய் விரும்பாததால் அக்டோபரில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதி மாற்றத்துக்கு பின்னால் ஜோதிடர்களின் ஆலோசனைகளும் இருப்பதாக ஒரு தரப்பு சொல்கிறது. கட்சியை அறிவித்தது, கொடி அறிமுகம், மாநாடு எல்லாவற்றிலும் ஜோதிடர்களின் கருத்துகளை பெற்றுக் கொள்கிறார் பொதுச் செயலாளர் ஆனந்த்” என்றனர்.

TVK Vijay – விஜய் த.வெ.க

எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த நடவடிக்கையை மாவட்டச் பொறுப்பாளர்கள் பலரும் எதிர்பார்க்கவில்லையாம். மாநாட்டு செல்கிறோம் என்ற ஆவலில் பல நாள்களுக்கு முன்பே வாகன ஏற்பாடுகள் செய்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டோம் என வருந்துகிறார்களாம்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY