Exclusive `அதே இடத்தில் ஆண் அமைச்சர் இருந்தால் இப்படி பேசுவாரா?’ – அன்னபூர்ணா பிரச்னையில் வானதி

`மிரட்டி பணிய வைப்பதா?’

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தொழில்துறையினடன்  ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்

இதையடுத்து சீனிவாசன் நேற்று நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியதாக ஒரு வீடியோ வெளியானது. இது சமூகவலைதளங்களில் விவதமாகியுள்ளது. தங்கள் தொழிலில் உள்ள பிரச்னையை சுட்டிக் காட்டிய பெரியவரை, இப்படி மிரட்டி பணிய வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

`அவராக முன்வந்து கேட்கும்போது, நாங்கள் எப்படி தவிர்க்க முடியும்?’

இதுகுறித்து பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனிடம் நாம் பேசினோம், “அவர்தான் காலையில் இருந்து அழைத்து, ‘நிதி அமைச்சர் செல்வதற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பலமுறை கேட்டார். அதனடிப்படையில் தான் சந்திப்பு நிகழ்ந்தது.

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டபோது

அவராக முன்வந்து கேட்கும்போது, அதை நாங்கள் எப்படி தவிர்க்க முடியும். அப்போது நிதி அமைச்சர், ‘நீங்கள் ஜிஎஸ்டி குறித்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எம்எல்ஏ என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்றெல்லாம் பேசுவது தவறு’ என்று கூறினார்.

அவரின் வயதுதான், நிதி அமைச்சருக்கும் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லலாம். அவரின் மனைவியும் அழைத்து மிகவும் வருத்தப்பட்டார். தான் பேசியது அநாகரீகம் என்று புரிந்துகொண்டதால், அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன்

நாங்கள் இருப்பதை மட்டுமே பேசுகிறோம். எதையும் மிகைப்படுத்தி பேசவில்லை. மேலும், நம் சமூகத்தில் பெண்கள் என்றால் யார் எப்படி வேண்டுமானாலும்  கேள்வி கேட்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

இதே இடத்தில் ஆளுங்கட்சியின் ஆண் அமைச்சர் அல்லது அல்லது ஆண் எம்எல்ஏ இருந்திருந்தால் இதே பாணியில் பேசியிருப்பார்களா. சமுதாயத்தின் இந்த மனநிலையில் இருந்தும் நாங்கள் மீண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் ஆண், பெண் பார்வை வேண்டும்.

கோவை நிகழ்ச்சி

நாங்கள் என்ன உயரத்துக்கு சென்றாலும், நீங்கள் பெண் தானே என்று அடி மனதில் ஓர் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  இதுபோன்ற சவால்களை தான் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கிறோம். சீனிவாசன் என் சகோதரர் போன்றவர். எப்போதும் மரியாதையுடன் தான் இருப்போம்.

கோவை தொழில்துறைக்கு, மத்திய அரசு மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தீவிர முயற்சிகள் செய்கிறோம்.  அதற்காக தான் அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் பன்னும், க்ரீமும் தான் வெளியில் வருகிறது. அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.

மன்னிப்பு கேட்டபோது

நான் மக்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். சமுதாயத்தில் இவ்வளவு உயர்ந்த பொறுப்பில் உள்ள அமைச்சர் மற்றும் எம்எல்ஏ, ஒரு ஆணாக இருந்திருந்தால் இதேபோல பேசியிருப்போமா.” என்று யோசித்து பார்க்க வேண்டும்.” என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY