‘வர்த்தக ஒத்துழைப்பு’ என்ற பெயரில் கடன், முதலீடு, உதவிகளை அளித்துவிட்டு, ஆப்பிரிக்க நாடுகளை சுரண்டுவதில் சீனா குறியாக இருப்பதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன. இதன் பின்னணியை கவனிப்போம்.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆப்பிரிக்கா உடனான வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது சீனா. பீஜிங்கில் நடைபெற்ற சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மாநாடு, ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய உயர்மட்ட சீன – ஆப்பிரிக்க உறவை உருவாக்குதல் மற்றும் மேம்பட்ட நவீனமயமாக்கலுக்காக இணைந்து செயல்படுதல் என்ற தலைப்பில் கீழ் நடைபெற்றது. ஆனால், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையிலான ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் இரு நாடுகளுக்கும் சமமான அளவில் பலனளிக்கும் வகையில் இருக்குமா என்பதுதான் பலரின் கேள்வி!
ஆப்பிரிக்க நாடுகளின் சர்வதேச வர்த்தக உறவில், சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மாநாடு என்பது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பொதுச் சபை கூட்டங்களில் கலந்துகொள்வதை காட்டிலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். 2022-ல் நடந்த ஆப்பிரிக்க – அமெரிக்க ஒத்துழைப்பு மாநாட்டில் 45 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன – ஆப்பிரிக்க மாநாட்டில் 40 முதல் 60 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த அளவுக்கு இந்த வர்த்தக உறவு அதிக ஆர்வத்தை தூண்டுவதற்கான காரணம் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உறவு ஆப்பிரிக்க கண்டத்துக்கு முக்கியமானது என்றாலும், சீனாவுக்கு இருப்பது போன்ற லட்சியம் அவற்றுக்கு இல்லை எனலாம்.
ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு முக்கியமாக இருப்பதற்கான காரணம், மற்ற நாடுகளின் வாக்குறுதிகளை தூக்கி சாப்பிடும் வகையிலான மிகப் பெரிய வாக்குறுதிகள் இதில் முன்னிறுத்தப்படுவதுதான். சமமான ஆலோசனை, புரிதலை மேம்படுத்துதல், ஒருமித்த கருத்தை விரிவுபடுத்துதல், நட்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல ஆகியவையே இந்த ஒத்துழைப்பு மாநாட்டின் நோக்கமாக சொல்லப்படுகிறது.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் சீனா – ஆப்பிரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடன், முதலீடு மற்றும் உதவிக்காக பல பில்லியன் டாலர்களை சீனா வாக்குறுதி அளித்துள்ளது. இதில் மேற்கோள் காட்டப்பட்ட 60 பில்லியன் அமெர்க்க டாலர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிர்ந்தளிக்க வேண்டும். அதாவது, 2015 முதல் 2018 வரையிலும், பின்னர் 2018 முதல் 2021 வரையிலும்.
ஆனால், இந்த தொகை பகிர்வில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாதது போல் தோன்றுகிறது. சீனா கொடுத்த வாக்குறுதியின்படி இதுவரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று தெளிவாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் சீனா தனது வாக்குறுதிகளில் உண்மையாக இல்லை என்பதே நிபுணர்கள் பலரின் கருத்தாக உள்ளது.
சீனா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து ஒரு வெளிப்படையான நகர்வுக்கான எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. சீனா தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே வட்டியில்லா கடன்களையும், உதவிகளையும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ரயில் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றை நிர்மாணிப்பதில் சீன நிறுவனங்கள் ஆப்பிரிக்க அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வருகின்றன. எனினும், இவை சீனா மற்றும் தனித்தனி ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உடன்பாடுகள் அடிப்படையில் உருவானவை ஆகும். ஒரு கூட்டு வியூகத்தை தாண்டி இந்த தனித்தனி ஒப்பந்தங்கள் சீனாவின் தரப்புக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த பரஸ்பர ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கே அதிக பலன்கள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, இந்த கட்டுமானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு தேவையான கருவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனாவிலிருந்தே வரவழைக்கப்படுகின்றனர். சீனாவிடமிருந்து ஆப்பிரிக்காவுக்கு எந்தவொரு தொழில்நுட்பமோ அல்லது திறன்களோ பகிரப்படவில்லை. உள்ளூர் மக்கள் பிரதானமான கூலி வேலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவுக்கான வர்த்தக வீயூகத்தை கடந்த 2006-ம் ஆண்டே சீனா வெளியிட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள். ஆனால் இன்று வரை ஆப்பிரிக்கா அப்படியான எதையும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் இத்தனை ஆண்டு காலமும் இந்த வர்த்தக உறவில் ஆப்பிரிக்கா எந்தவொரு செயல்பாடுகளும், கொள்கைகளும் இன்றி ஈடுபட்டு வருகிறது என்பதே உண்மை.
இன்னொருபுறம் ஆப்பிரிக்க நாடுகளை சுரண்டுவதற்காகவே சீனா கடனுதவி செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அந்த நாடுகளால் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்போது சீனா அந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
உதாரணமாக, கென்யா தனது வெளிநாட்டுக் கடன்களில் 17 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்தக் கடன் தொகையை ஈடுசெய்ய அந்நாட்டு அரசு வரிகளையும், விலைவாசிகளையும் உயர்த்தியது. இதன் எதிரொலியாக அங்கு பெரும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. அங்கோலா 18 பில்லியன் டாலர்கள், ஜாம்பியா 10 பில்லியன் டாலர்கள் மற்றும் கென்யா 6 பில்லியன் டாலர்கள் கடன் தொகையை சீனாவுக்கு திரும்ப செலுத்த வேண்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பக்கம் மற்றொரு பலவீனமும் உள்ளது. அது ஆப்பிரிக்க ஒன்றிய கமிஷன். இதன் தலைவர், ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் சட்டசபைகளால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த கமிஷனுக்கு, சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஆப்பிரிக்காவின் நிலைப்பாட்டை வரையறுப்பதற்கான அதிகாரம் உண்டு. எனினும், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைந்த அணுகுமுறையை விட தனிப்பட்ட இறையாண்மையை விரும்புவதால் ஆப்பிரிக்க ஒன்றிய கமிஷன் தலைவருக்கு சீனாவுடனான உறவில் ஆப்பிரிக்காவின் நிலைப்பாட்டை தீர்மானிப்பதில் எந்தவொரு சிறப்புச் சலுகையோ, அதிகாரமோ கிடையாது.
கடந்த பத்து ஆண்டுகளில், ஆப்பிரிக்காவுக்கென ஒரு தனி வியூகம் இல்லாததன் விளைவு, சீனா – ஆப்பிரிக்கா இடையிலான வர்த்தக உறவில் ஒரு சமநிலையற்ற தன்மை தொடர்ந்து இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY