சமீபத்தில் கோயம்புத்தூர் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் கோவையிலுள்ள தொழில்துறையினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்தக் கலைந்துரையாடல் நிகழ்வில் கோவையைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது குறைகளை எடுத்துக் கூறியிருந்தனர். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சிக்கல்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். அவரது பேச்சும், ஜி.எஸ்.டி குறித்த விமர்சனமும் காணொலியாக சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘கேள்வி கேட்ட நபரை, மன்னிப்புக் கேட்க வைப்பதுதான் ஜனநாயமா?’ என இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரவே, ‘அவராகத்தான் முன்வந்து மன்னிப்பு கேட்டார்’ என வானதி சீனிவாசன் விளக்கம் தெரிவித்தார்.
இருப்பினும், ‘ஜி.எஸ்.டி குறித்து நியாயமாகக் கருத்துத் தெரிவித்தவரை மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது கண்டனத்திற்குரியது’ என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கோவை அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கேரள கங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “இதுதான் அவர்களின் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அன்னபூர்ணா சீனிவாசன் எழுப்பிய கேள்வி நியாயமானதுதான். ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு ஆணவம்!” என்று பதிவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவருப்பானதும்கூட. தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நியாயமானக் கோரிக்கையை முன்வைத்த தொழிலதிபரை மிரட்டிய பா.ஜ.க-வின் செயல் கீழ்த்தரமானது. பா.ஜ.க தலைகீழாக நின்றாலும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தி.மு.க-வைப் போன்றே தற்போது பா.ஜ.க-வும் செயல்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அன்னபூர்ணா சீனிவாசன் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவி விட்டது. அதை அதிகாரத்தை வைத்துப் பணிய வைக்க நினைக்கிறார்கள். எவ்வளவுதான் வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் உள்ள உண்மையையும், சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக சார்பாக மன்னிப்பு கோரிய அண்ணாமலை “மத்திய நிதியமைச்சருக்கும், தொழிலதிபருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக தமிழக பா.ஜ.க சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசி, இந்த எதிர்பாராதத் தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்தேன். சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருப்பதோடு, மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துவருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.