Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!’ – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார்.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவே, அடுத்த நாளே உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து அதற்குத் தடை வாங்கியது. மறுபக்கம், சி.பி.ஐ-யும் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவுசெய்ய, கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இத்தகைய சூழலில், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ-க்கு சாரமாரியாகக் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் வழங்கியது.

அதைத் தொடர்ந்து, இன்று மாலை திகார் சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளிவந்தார். அப்போது, சிறைக்கு வெளியே குழுமியிருந்த ஆம் ஆத்மி தொண்டர்களிடம் கொட்டும் மழையில் பேசிய கெஜ்ரிவால், “என் வாழ்வில் பல சிரமங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம், எனது ஒவ்வொரு நகர்விலும் கடவுள் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். அதேபோல, இந்த முறையும் கடவுள் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். ஏனென்றால் நான் நேர்மையாக இருந்திருக்கிறேன்.

என்னுடைய தைரியம் இப்போது 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. அவர்களின் (பாஜக) சிறைச் சுவர்கள் என்னுடைய தைரியத்தைப் பலவீனப்படுத்த முடியாது. எனக்கு சரியான பாதையைக் காட்ட இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாட்டைப் பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தவும் முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகத் தொடர்ந்து நான் போராடுவேன்” என்று உரையாற்றினார்.