MahaVishnu: 5 மணி நேர விசாரணை… மகா விஷ்ணுவின் ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள் பறிமுதல், நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தி வருகிறார். குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரிடம் வாடகைக்கு இடத்தைப் பெற்று, மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தி வந்ததுடன், யூ-டியூப் மூலம் ஆன்மிகம் தொடர்பாக பிரசங்கமும் செய்து வந்தார்.

மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மறுஜென்மம் தொடர்பாக மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அவரை கடந்த வாரம் சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் மகாவிஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை போலீஸார் மகாவிஷ்ணுவை பலத்த பாதுகாப்புடன் குளத்துப்பாளையத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள அலுவலக அறையில் வைத்து அவரிடம் விசாரித்தனர். அங்கிருந்த அறையை மூடி, போலீஸார் விசாரித்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, வருவாய்த்துறையினர் முன்னிலையில் எடுத்துச் சென்றனர்.

நன்கொடை விவரங்கள் உள்ளிட்டவைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அன்னதானத்துக்கான சமையல் பணியாளர்கள் 4 பேர், அலுவலக ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். தொழில்நகரமான திருப்பூர் அருகே அலுவலகம் அமைக்க யார் காரணம்? அதன் பின்னணியில் தொழிலதிபர்கள் யாரேனும் உள்ளனாரா என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மகாவிஷ்ணு

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், “மகாவிஷ்ணுவுக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. அவர் வெளிநாட்டில் அலுவலகம் அமைக்க உதவியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். தற்போது கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஆவணங்களை ஆய்வு செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.