அன்னப்பூர்ணா: சீனிவாசனின் `மன்னிப்பு’ டு சீனிவாசனிடம் `மன்னிப்பு’ – GST பேச்சும் சர்ச்சையும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னப்பூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் எழுப்பிய ஜி.எஸ்.டி குறித்த கேள்விகள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, ஹோட்டல் அதிபர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் விமர்சனங்களை கிளப்பியது. இந்தநிலையில், லண்டனின் இருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற நிகழ்வு

கடந்த செப்டம்பர் 11-ம் தேதி, கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு தொழிலதிபர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அந்தவகையில், கோவையின் பிரபல சைவ உணவகமாக திகழும் `ஹோட்டல் அன்னப்பூர்ணா’வின் உரிமையாளர் சீனிவாசன் வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டியால் ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது பற்றி நகைச்சுவையாக தனது கருத்தைத் தெரிவித்தார்.

குறிப்பாக மேடையில் நிர்மலா சீதாராமனுக்கு அருகில் அமர்ந்திருந்த கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை குறிப்பிட்டபடி பேச ஆரம்பித்தவர், “உங்களுக்கு பக்கத்தில் அமந்திருக்கும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எங்களின் ரெகுலர் கஸ்டமர். வரும்போது எல்லாம் எங்களுடன் சண்டை போடுகிறார். காரணம் ஸ்வீட் வகை உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி நிர்ணயித்துள்ளீர்கள். கார வகை உணவுகளுக்கு 12% ஜி.எஸ்.டி நிர்ணயித்துள்ளீர்கள். அடுத்தது, பேக்கரி உணவுகளில் பன், ரொட்டி தவிர மற்ற உணவுகளுக்கு 28% ஜிஎஸ்டி இருக்கிறது. இப்படி தினமும் ஜிலேபி, காபி, காரம் சாப்பிட்டுவிட்டு… காரத்துக்கு 12% ஜிஎஸ்டியா என எங்களிடம் வானதி சண்டையிடுகிறார். கேட்டால், வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜிஎஸ்டியும் நிர்ணயித்துள்ளதாக கூறுகிறார்…”என்று பேசிக்கொண்டிருக்க, உடனே இடைமறித்த நிர்மலா சீதாராமன், “நாங்கள் ஸ்டேட் வாரியாகவெல்லாம் வரி போடவில்லை” என்று பதிலளித்தார்.

கேள்வி கேட்கும் அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்

தொடர்ந்து பேசிய சீனிவாசன், “தமிழகத்தில் ஸ்வீட், காரம், காப்பி என்ற அடிப்படையில் தான் விற்பனையாகும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள். வாடிக்கையாளர்களூம் சண்டையிடுகின்றனர். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள், ‘நீங்க கிரீமையும், ஜாமையும் கொண்டு வாங்க.. நானே வைச்சுக்கிறேன்.’ என்று சொல்கின்றனர். இப்படி, ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு வித்தியாசமான ஜி.எஸ்.டி போடுவதற்கு எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. கடை நடத்த முடியவில்லை. அதனால எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்துங்கள்!” என்று கோரிக்கை வைத்தார்.

நிர்மலா சீதாராமன்

மேலும், “ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், கூட்டம் குறைவாக இருக்கும்போதும் ஒரே வரி தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சீசன் காலகட்டத்தில் தொகை அதிகமாக இருக்கும். மற்ற நாள்களில் அந்த தொகை இருக்காது. அதற்கு இந்த முறையில் வரி நிர்ணயிப்பது நியாயம் இல்லை. எனவே, எங்களின் கோரிக்கையை பரிசீலினை செய்யுங்கள்” என்று மற்றொரு கோரிக்கையும் வைத்தார்.

கோவை ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டபோது

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மத்திய அரசையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நெட்டிசன்கள் விமர்சனங்களால் வறுத்தெடுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த நிர்மலா சீதாராமன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். இதை கேட்பவர்களுக்கு ‘ஆஹா’ என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார். அவர் இதை ஜனரஞ்சகமாக பேசியதால், ஜி.எஸ்.டி-க்கு பரம விரோதியாக இருப்பவர்களுக்கு அது ஆதாயமாகத் தெரியும். ‘பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு. எல்லாரும் சிரிக்கறாங்க. அந்த அம்மாவுக்கு விஷயம் தெரியுமா…’ என்று சொல்வார்கள். நான் யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை!” என்று பதிலளித்தார்.

இந்தநிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், வானதி சீனிவாசனையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களிடம் அன்னப்பூர்ணா உரிமையாளர் சீனிவாசன் `கையெடுத்து மன்னிப்பு’ கேட்ட வீடியோ ஒன்று பா.ஜ.கவினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அந்த வீடியோவில், “நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனும் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று கூறியபடியே நிர்மலா சீதாராமனைப் பார்த்து எழுந்துநின்று கைக்கூப்பி மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த வீடியோவை குறிப்பிட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் `உரிமைக்காக கேள்வி கேட்ட ஹோட்டல் உரிமையாளர் பா.ஜ.கவால் மிரட்டப்பட்டிருக்கிறார்’ என கடுமையாக விமர்சனம் செய்தனர்.

குறிப்பாக தி.மு.க எம்.பி கனிமொழி கருணாநிதி, “‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ – (குறள் 978, அதிகாரம் 98) என்ற திருக்குறளைப் பகிர்ந்து, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

கனிமொழி

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “கோயம்புத்தூர் அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், அரசாங்க பிரதிநிதிகளிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறையைக் கேட்கும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனுடம் முற்றிலும் அவமரியாதையுடன் சந்திக்கப்படுகிறது. ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, ​​மோடி ஜி அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார். பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜி.எஸ்.டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி

கடைசியாக அவர்களின் தகுதியானது மேலும் அவமானம் தான். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, ​​​​அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவமானமாகத் தெரிகிறது. சிறு குறு தொழில் முனைவோர் (MSME) பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்!” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “சீனிவாசன்தான் காலையில் அழைத்து, ‘நிதி அமைச்சர் செல்வதற்குள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றுகேட்டார். அதனடிப்படையில் தான் சந்திப்பு நிகழ்ந்தது. அவராக முன்வந்து கேட்கும்போது, அதை நாங்கள் எப்படி தவிர்க்க முடியும். அப்போது நிதி அமைச்சர், ‘நீங்கள் ஜிஎஸ்டி குறித்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எம்.எல்.ஏ என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்றெல்லாம் பேசுவது தவறு’ என்று கூறினார். தான் பேசியது அநாகரீகம் என்று புரிந்துகொண்டதால், அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

வானதி சீனிவாசன் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லலாம். ஆனால், நம் சமூகத்தில் பெண்கள் என்றால் யார் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதே இடத்தில் ஆளுங்கட்சியின் ஆண் அமைச்சர் அல்லது அல்லது ஆண் எம்.எல்.ஏ இருந்திருந்தால் இதே பாணியில் பேசியிருப்பார்களா?” என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

லண்டனில் அண்ணாமலை

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத வகையில் லண்டனின் இருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சீனிவாசன் மன்னிப்பு வீடியோ பொதுவெளியில் வெளியானதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை, “மத்திய நிதியமைச்சருக்கும், தொழிலதிபருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக தமிழக பா.ஜ.க சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசி, இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு கருத்தில் இருக்கும் நிலையில், சம்மந்தமே இல்லாமல் திடீரென இடையில் புகுந்து அண்ணாமலை `மன்னிப்பு’ கேட்டிருப்பது பா.ஜ.கவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX