சமீபத்தில் கோயம்புத்தூர் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுடன் கோவையிலுள்ள தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன்பின்னர், வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று பரவியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரவே, அவராகத்தான் முன்வந்து சங்கடத்தை ஏற்படுத்தியதாக மன்னிப்பு கேட்டார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இருப்பினும், கோவை அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமரியாதை ஏற்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் ராகுல் காந்தி அமெரிக்காவிலிருந்த வண்ணம் கண்டனம் தெரிவித்தார். இவ்வாறிருக்க, இந்த சம்பவத்துக்குத் தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை ட்வீட் செய்திருக்கிறார். அந்தப் பதிவில், “மத்திய நிதியமைச்சருக்கும், தொழிலதிபருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக தமிழக பா.ஜ.க சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசி, இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.