சர்ச்சையில் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன்? – குற்றச்சாட்டும் அரசின் விளக்கமும்

தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற `தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன்’ மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கிறார்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் பயிற்றுநர்களும். என்ன தான் பிரச்னை என விசாரித்தோம்.

“வருடம்தோறும் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியையும் அதற்கான தகுதி சுற்றையும் மாவட்டளவிலும் நடத்த தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு `தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன்’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள். இந்த அமைப்பின் சான்றிதழுக்கு ஸ்போர்ட்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும் நிலையிலும் அசோஷியேசன் தரப்பு கடமைக்கு போட்டி நடத்தி விளையாட்டை மேம்படுத்தும் முனைப்பின்றி செயல்படுவதாக கொதிக்கிறார்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் பெற்றோர்கள்.

வேளச்சேரி திடல்

நம்மிடம் பேசிய அவர்கள், “சென்னை வேளச்சேரியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு கழக திடலில்தான் `ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்’ போட்டிகள் வழக்கமாக நடைபெறும். ஆனால் `கேலோ இந்தியா’ போட்டிகள் நடத்தும் அளவுக்கான தரம் கொண்ட அரங்கை பயன்படுத்தாமல் கடந்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடந்த ஒருங்கிணைந்த சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் போட்டிகளை நகருக்கு வெளியே உத்தண்டி தனியார் ஜிம்னாஸ்டிக் அரங்கில் நடந்தன.

போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பிரச்னைகூட சமாளித்துவிட்டோம். ஆனால் மாணவர்களுக்கு உளவியலாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த போட்டி திடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் எகிறி குதித்து தாண்டும்போது சுவரில் முட்டி விபத்து ஏற்படும் அபாயமும் உபகரணங்களும் பராமரிப்பின்றி படுமோசமாக இருந்தன. இந்த லட்சணத்தில் போட்டி நடத்தி மாணவ மாணவர்களை தேர்வு செய்து மாநிலப் போட்டியையும் செப்டம்பர் 28-ம் தேதி நடத்துகிறார்கள்” என குமுறியோடு லாபக்கணக்கில் அசோசியேஷனுக்கு தலைமைக்கு சொந்தமான அரங்கம் என்பதனால்தான் மாவட்ட அளவிலான போட்டிகள் உத்தண்டியில் நடத்தப்படுகிறதா.. எனக் கேள்வியெழுப்பியவர்கள் உத்தண்டியில் அரங்கத்தில் போட்டி நடத்துவது இது முதல்முறையல்ல” என்ற ஆவேசப்பட்டனர்.

உத்தண்டி தனியார் வளாகம்

போட்டி எங்கே எப்படி நடத்தப்படுகிறதென்ற எந்த கவலையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு கழகத்துக்கு இல்லை என்ற ஆதங்கத்தில் பேசிய முன்னாள் பயிற்றுநர்கள் சிலரோ, “ஆகஸ்ட் 10-ம் தேதி என்றில்லாமல் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும் உத்தண்டியில் சில தகுதி சுற்றுகள் நடந்தேறின. அப்படி பங்கேற்கும் மாணவ மாணவிகளிடம் `இங்கேயே பயிற்சிக்கு வந்துவிடுங்கள், போட்டி நடுவர்களே பயிற்சிக் கொடுப்பார்கள்’ என்ற வற்புறுத்தல்களும் நடக்கின்றன. மற்ற மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிகளையும் ஒப்பிடும்போது போட்டிக்கான கட்டமைப்பே தமிழ்நாட்டில் கவலைக்கிடமாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் போட்டிகள் நடத்தப்படுகிறதே தவிர பயிற்சி முகாம்கள் குறித்து மாநிலம் முழுக்க கிளை வைத்திருக்கும் அசோசியேஷன் கவலைப்படவில்லை. வெளிநாட்டு பயிற்றுனர்களை அழைத்து பயிற்சி கொடுக்கும் சூழலில் சென்னையில் விளையாட்டு மேம்பாட்டு கழகத்திடமே இருவர்தான் இருக்கிறார்கள். போட்டி நடத்தும் அசோசியேஷனுக்கு உரிய நிதி பங்களிப்பையும் அரசு செய்யாமலிருப்பதால்தான் நுழைவு கட்டணங்கள் 1000 ரூபாயாக உயர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். தலைநகரிலேயே பெற்றோர்கள் இப்படி புலம்கிறார்கள் என்றால் மற்ற மாவட்டங்கள் குறித்து சொல்லிதான் தெரிய வேண்டுமா… அசோசியஷனின் தலைவராக முன்னாள் விளையாட்டு வீரர்களை நியமிப்பதோடு அதன் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பிப்பதே தீர்வை நோக்கி நகர வழி. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்பிரச்னைகளை கவனிக்க வேண்டும்” என்றனர்.

உத்தண்டி தனியார் வளாகம்

“குற்றச்சாட்டுகளை மறுத்து பேசிய தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அசோசியேசன் தலைவர் ஜி.பாலா, “ ஆன்லைனில் புக் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையானாலும் குறைந்த அளவிலான மாணவர்கள் பங்கேற்றதாலும்தான் உத்தண்டியில் போட்டி நடைபெற்றது

அதுவும் ஸ்பான்ஸர்சிப் அடிப்படையில் நடத்தியதால் அசோசியசனுக்கு அதில் எந்த செலவுமில்லை. அங்கு போதிய வசதியில்லை, உளவியல் பிரச்னை இருக்கிறது. மாணவர்களை சேரச் சொல்லவதாக வரும் தகவல்களெல்லாம் `ஹம்பக்`தான். மேலும்  செப்டம்பர் இறுதியில் நடக்கவுள்ள மாநிலப் போட்டிகள் அரசின் வேளச்சேரி திடலில்தான் திடலில்தான் நடத்துகிறோம். அதற்கான ஆதாரங்களை தருகிறேன்” என்றார்.

மேகநாத ரெட்டி ஐஏஎஸ்

 இறுதியாக விளக்கம்கேட்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் உறுப்பினர் செயலர் மெகநாத ரெட்டியிடம் பேசினோம், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்திடம் போதிய ஜிம்னாஸ்டிக் பயிற்றுனர்கள் இல்லை என்ற தகவல் தவறு. ஜிம்னாஸ்டிக் பயிலும் மாணவர்களுக்கென அரசு சார்பில் விடுதி அமைத்து ஜிம்னாஸ்டிக் போட்டிகளை மேம்படுத்தி வருகிறோம். அதேபோல் எந்த அமைப்பு விரும்பினாலும் வேளச்சேரி SDAT திடலை பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக போட்டியை வேளச்சேரி திடலில்தான் நடத்த வேண்டும் என்றில்லை எங்கு நடத்த வேண்டும் என்பது அந்த அசோசியேஷனின் விருப்பம்தான். ஆனால் அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு குறித்து எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை” என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY