அடுத்த அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானாவின் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 12ம் தேதி (இன்று) தொடங்கிய நிலையில், தற்போது தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார் வினேஷ் போகத்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (29) இறுதிப் போட்டிக்குச் செல்வதற்குமுன் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அந்த இக்கட்டான சூழலில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாகத் தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் வினேஷ்.
இதையடுத்து பாரிஸிலிருந்து இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு மக்கள் அனைவரும் தங்களின் அன்பைப் பதக்கங்களாக அள்ளிக் கொடுத்து இந்திய நாட்டின் தங்க மகளைக் கொண்டாடினர். இதே சமயத்தில் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பும் வெளியாகவே, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டன. அதை உறுதி செய்யும் விதமாக வினேஷ் போகத்தும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இந்தியக் காங்கிரஸ் கட்சி இணைந்தனர்.
தற்போது வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ஹரியானாவின் ஜுலானா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கவுள்ளார் வினேஷ் போகத். அதற்கான வேட்புமனுவை இன்று சமர்ப்பித்துள்ளார்.
அதில் தனது சொத்து விவரங்களைப் பற்றிக் கணக்குக் காட்டியிருக்கும் வினேஷ் போகத், தன்னிடம் வால்வோ எக்ஸ் சி60 (ரூ. 35 லட்சம்), ஹூண்டாய் க்ரெட்டா (ரூ. 12 லட்சம்), டொயோட்டா இன்னோவா (ரூ. 17 லட்சம்) ஆகிய கார்களை வைத்திருக்கிறார். இதில் டொயோட்டா கார் வாங்கியதில் ரூ. 13 லட்சம் கடன் இருப்பதாகக் கூறியிருக்கிறார். ரூ. 2 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், தன் கணவர் பெயரில் ரூ. 19 லட்சம் மதிப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதி தீவிரமாகத் தேர்தலுக்குத் தயாராகி வரும் வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.