Rahul – Modi: ` ராகுலின் பாஜக டார்கெட்; அமெரிக்காவிலும் அரசியல் பேச்சு’ – தகிக்கும் அரசியல் களம்

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேசியவர், “நாடாளுமன்றத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றிருந்தால் பா.ஜ.க-வால் 240 இடங்களை கூட நெருங்கி இருக்க முடியாது. அவர்கள் எங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கினார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை தான் தேர்தல் ஆணையம் செய்தது. நாடு முழுவதும் மோடி பிரசாரம் செய்யும் வகையில் தேர்தல் கட்டமைக்கப்பட்டது.

அவர்கள் பலமாக இருந்த மாநிலங்களை விட பலவீனமாக இருந்த மாநிலங்களில் தேர்தல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது. அதனால், இதை நான் நியாயமான தேர்தலாக பார்க்கவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே பார்க்கிறேன். தேர்தலுக்கு முன்பு பல பிரச்னைகளை ஒரே நேரத்தில் கொடுத்தனர்.

கார்கே, ராகுல் காந்தி

உதாரணமாக, இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் எல்லாம் விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்தனர். சமமான தேர்தல் களம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள், விசாரணை அமைப்புகள் என அனைத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கைப்பற்றியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கின்றன. முதலில் தேர்தலில் போட்டியிடுவது, இரண்டாவது, ஆர்எஸ்எஸ், பாஜக ஏற்படுத்திய சேதத்தை சரி செய்வது. முதலில், தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.க-வுக்கு எதிராக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும், இரண்டு மூன்று மாதங்களில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம். பிறகு, பா.ஜ.க-வும் ஆர்எஸ்எஸு ம் அந்த மாநிலங்களில் ஏற்படுத்திய சேதங்களை சரி செய்வோம். இன்னும், என்மீது 20-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. விசாரணை அமைப்புகளை நடுநிலையாக்குவது சவாலான ஒன்று.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் மக்கள் கொண்டிருந்த அச்சம் விலகிவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்கிறது. நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பா.ஜ.க தாக்குகிறது. இதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன். பா.ஜ.க பற்றிய அச்சம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான எந்தத் தாக்குதலையும் ஏற்க மாட்டோம் என்று கூறிய இந்திய மக்களின் சாதனை இது. இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டதே நான் நான்காயிரம் கிலோமீட்டர் நடப்பதற்குக் காரணம். இதுகுறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசியபோதும் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

பிறகு ஊடகங்களுக்குச் சென்றோம், அவர்களும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. சட்ட அமலாக்க அமைப்புகளின் முன் ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. எல்லா வாயில்களும் மூடப்பட்டன. அப்போது எங்களால் மக்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது புரியவில்லை. இந்த பிரச்னை நீண்ட காலம் நீடித்தது.

பிரதமர் நரேந்திர மோடி

அப்போதுதான் மக்களிடம் நேரடியாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது. முடிவில் இந்தப் பயணம் எனது பணிகளைப் பற்றிய எனது எண்ணத்தையே மாற்றிவிட்டது. அதாவது அந்தப் பயணத்தின் போது அன்பை அரசியலில் புகுத்தியதுதான். இது எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக நடந்த சிறந்த விஷயம். இது வித்தியாசமான ஒன்று. ஏனென்றால் பெரும்பாலான நாடுகளில் அரசியல் சொற்பொழிவில் அன்பு என்ற வார்த்தையைக் காண முடியாது. வெறுப்பு, கோபம், அநீதி, ஊழல் போன்ற வார்த்தைகளை தான் கேட்க முடியும். இந்திய அரசியல் சாசனத்தை பாஜக தாக்கி வருகிறது. இந்தியாவை ‘ஒரே கருத்தியல் கொண்ட நாடு’ என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதேசமயம் இந்தியா ‘பல கருத்தியல்களால்’ ஆனது என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவைப் போலவே அனைவருக்கும் கனவு காண உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். அனைவருக்கும் பங்கேற்க வாய்ப்பு இருக்க வேண்டும்” என கொதித்தார்.

தொடர்ந்து, “நான் ஒரு உண்மையை சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். பிரதமர் மோடியை உண்மையில் நான் வெறுக்கவில்லை. அவர் மீது எனக்கு எந்த வெறுப்பு உணர்வும் இல்லை. அவரது கருத்துகளை மட்டுமே எதிர்க்கிறேன். எந்த விஷயத்திலும் அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. எனக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. உண்மையில், அவர் மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு மக்களிடம் நிலவிய அச்ச உணர்வு தற்போது மறைந்துவிட்டது. 56 இஞ்ச் மார்பு கொண்டவர், கடவுளுடன் நேரடி தொடர்பு உள்ளவர், பிரதமர் மோடியின் கருத்துகள் என்ற பேச்செல்லாம் பழைய கதையாக மாறிவிட்டது.” என்றார்.

சீனா

தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசியவர், “இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததுதான் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் இப்பிரச்னை இருக்கிறது. ஆனால் இந்த பிரச்னை சீனா, வியட்நாமில் இல்லை. 1940 – 60 வரையில் உலக உற்பத்தியின் மையமாக அமெரிக்கா இருந்தது. இங்குதான் கார்கள், வாஷிங் மிஷின்கள், டிவிக்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. ஆனால் படிப்படியாக இந்த தயாரிப்பு தென் கொரியா, ஜப்பான் வசம் சென்றது. இப்போது சீனாவின் கைகளுக்கு மாறிவிட்டது. இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் போன்கள், பர்னிச்சர்கள், உடைகள் என அனைத்தின் பின்புறத்திலும் ‘சீனாவில் தயாரிக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருக்கும். அதுதான் உண்மை. அப்படியானால் என்ன நடந்தது?. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உற்பத்தி யோசனையை கைவிட்டு சீனாவிடம் ஒப்படைத்துள்ளனவா?. உற்பத்தி துறையே வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

வங்கதேசம் இப்போது பிரச்னைகளை எதிர்கொள்கிறது. இருப்பினும் ஆடை உற்பத்தியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியது. ஆடைத் தொழிலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டனர். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக, புதிய சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மெட்ரோ பாதைகள் அமைப்பதுதான் உள்ளது. மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறது. 2014 – 2024க்கு இடையில், இந்தியாவில் சுமார் 54,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

பிரதமர் மோடி

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் பார்த்தால், 2020-21ல் தனியார் முதலீடு 19.6 சதவீதம் மட்டுமே. அதேசமயம் 2007-08ல், தனியார் முதலீடு ஜிடிபியில் 27.5 சதவீதத்துடன் உச்சத்தில் இருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி 2000-ல் நாட்டில் வேலையில்லாதவர்களில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை 54.2 சதவீதமாக இருந்தது. அது 2022-ல் 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனநாயக சூழலில் இந்தியா உற்பத்தி செய்யும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது நடக்கும் வரை பெரிய வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியா அனைத்து தரப்பினருக்குமான ஒரு நியாயமான இடத்தை அடையும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்போம். ஆனால், தற்போது இந்தியா அந்த இடத்தை அடையவில்லை.” என வெடித்தார்.

இதற்கு பாஜகவில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார். மதம், மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை ராகுல் காந்தியின் பேச்சு அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வெளியேறிவிட்டன. பா.ஜ.க இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமித்ஷா

இதுகுறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறும்போது, ‘”வெளிநாடுகளில் இந்தியா குறித்து தரக்குறைவாக பேசி வருகிறார் ராகுல் காந்தி. அவர் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற பெரும் பொறுப்பை அவரது தோள்களில் மக்கள் சுமத்தியுள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. வெளிநாட்டுக்கு சென்றால் என்ன பேசுவது என்று கூட அவருக்கு தெரிவது இல்லை” என்றார்.

மேலும் பா.ஜ.க எம்.பி கிரிராஜ் சிங், “ஆர்எஸ்எஸ்ஸை பற்றி அறிய ராகுல் காந்தி பல பிறவிகள் எடுக்க வேண்டும். எந்த துரோகியும் ஆர்எஸ்எஸ்ஸை அறிய முடியாது. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிப்பவருக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி தெரிய வாய்ப்பில்லை. இந்தியாவை இழிவுபடுத்துவதற்காகவே ராகுல் காந்தி வெளிநாடுசெல்கிறார் என்பது போல் தெரிகிறது. இந்திய மதிப்புகள் மற்றும் கலாசாரத்தில் இருந்து உருவான அமைப்பு என்பதால், ஆர்எஸ்எஸ்ஸை இந்த ஜென்மத்தில் ராகுல் காந்தியால் புரிந்து கொள்ள முடியாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வாஷிங்டனில் உள்ள ரேபர்ன் ஹவுஸ் அலுவலகத்தில் பிராட்லி ஜேம்ஸ் ஷெர்மன் தலைமையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் உமர் இடம்பெற்றிருந்தனர். அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி கூறிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் பாஜக கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, “பாகிஸ்தான் ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரானவருமான, தீவிர இஸ்லாமியவாதி, காஷ்மீர் ஆதரவாளருமான இல்ஹான் உமரை அமெரிக்காவில் ராகுல் காந்தி சந்தித்தார். சொல்லப்போனால் பாகிஸ்தான் தலைவர்கள் கூட இப்படியான சந்திப்பில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது” என்றிருக்கிறார். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு பதில் கொடுத்து வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY