விநாயகர் சதுர்த்தி: தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் பிரதமர் மோடி; என்ன சொல்கிறது பிரதமர் அலுவலகம்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். புதிய தொடக்கத்தின் கடவுளாகவும், தடைகளை அகற்றுபவராகவும் கருதப்படும் விநாயகருக்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சாலை ஓரங்களில் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைத்து, ஸ்பீக்கர் பொருத்தி பக்தி பாடல்கள் ஒலிக்கவிட்டும், பூஜைகள், பலகாரங்கள் என விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. 10-வது நாள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டுசென்று நீர் நிலைகளில் கரைக்கும் சடங்கும் நிகழ்த்தப்படும்.

விநாயகர் சதுர்த்தி

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், அவரின் மனைவி கல்பனா தாஸின் அழைப்பின் பேரில், இந்த விழாவில் இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலக எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி, தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். பகவான் ஸ்ரீ கணேஷ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் ஆசீர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.