‘முதலாளித்துவத்தை தூக்கியெறிந்தால்தான் மனிதகுலம் விடுதலை அடையும்.’ என்கிற கார்ல் மார்க்ஸின் கொள்கையை காலமெல்லாம் மக்களுக்காக பேசிய ஒரு கம்யூனிச குரல் இப்போது இயற்கையோடு கலந்திருக்கிறது.
இந்திரா காந்தி எமெர்ஜென்சியை கைவிட்டு பொதுத்தேர்தலை நடந்து முடிந்திருந்த காலக்கட்டம் அது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை சேராத நபராக மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றிருந்தார். ஆனாலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் வேந்தர் இந்திரா காந்திதான். தேர்தலில் தோற்று பிரதமர் பதவியை இழந்தபோதும் JNU வில் வகித்த பதவியை இந்திராகாந்தி விட்டுக் கொடுக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் கொதித்தெழுந்தார்கள்.
தங்களின் தலைவனுக்குப் பின்னால் இந்திரா காந்திக்கு எதிரான போராட்டத்திற்காக ஒன்று கூடினர். JNU பல்கலைகழகத்திலிருந்து இந்திரா காந்தியின் வீட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். மாணவர்களின் குரல் இந்திராவின் வீட்டுக் கதவை அதிரச் செய்தது. மாணவர்களின் முன்பு இந்திரா நிற்கிறார். இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்பது உட்பட மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அந்த மாணவர் சங்கத் தலைவர் இந்திராவின் முன்பே உரக்க ஒலித்தார். போராட்டத்திற்கு இந்திரா இணங்கிப் போனார். JNU பல்கலைகழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து விலகினார். JNU பல்கலைகழகத்தின் வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் முறையிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வர இந்தப் போராட்டம் வித்திட்டது.
இத்தனைக்கும் காரணமான அந்த போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய மாணவர் சங்கத் தலைவர்தான் சீதாராம் யெச்சூரி.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் எம்.ஏ. வணிகவியல் பயின்ற சீதாராம் யெச்சூரி எமெர்ஜென்சி காலத்திலேயே அதற்கு எதிராக போராடி சிறை சென்றவர். பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும் யெச்சூரிக்கும் சென்னைக்கும்(அன்றைய மெட்ராஸ்) நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது. யெச்சூரியின் அம்மா வழியினர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள். சென்னையின் அரசு பொது மருத்துவமனையில்தான் யெச்சூரியே பிறந்திருக்கிறார். மயிலாப்பூரில்தான் யெச்சூரியின் தாய் வழி உறவினர்களும் வசித்திருக்கின்றனர். பணி நிமித்தமாக யெச்சூரியின் குடும்பம் மீண்டும் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்திருக்கிறது.
அப்படியாயினும் ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் குடும்பத்தோடு சென்னை வந்து நேரம் செலவளிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. மூதாதையர்கள் வழக்கறிஞர்களாகவும் நீதிபதியாகவும் இருந்ததால் இவருக்கும் மக்கள் சார்ந்த பணிகளில் பொதுப்பணிகளின் மீதான ஆர்வம் இயல்பிலேயே இருந்தது.
கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே மாணவர் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சீதாராம் யெச்சூரி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்துக்குள் வந்தவுடன் இன்னும் தீவிரமானார். ஒரு மனிதன் சமூகத்தில் என்னவாக இருக்கப்போகிறார் என்பதை நிர்ணயிப்பதில் அந்த காலகட்டத்திய நிகழ்வுகளுக்கும் சூழல்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. 70 களின் அந்த மத்திய காலக்கட்டம், இந்திரா காந்தி அதிரடியான அரசியலை செய்துகொண்டிருந்த காலக்கட்டம். அடக்குமுறைகள் உச்சத்தை எட்டியிருந்தது. தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் கொந்தளித்துப் போய் போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இந்தியா முழுவதும் அதிகாரத்துக்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டுதான் யெச்சூரியின் அரசியல் ஆர்வத்தையும் அவர் சிவப்புக் கொடியை பற்றியதற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய அந்த சமயத்தில்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார். கட்சிக்குள் வெகு சீக்கிரமாகவே முக்கிய பொறுப்புகளுக்கு உயர்ந்த வெகு சிலரில் யெச்சூரியும் ஒருவர். சித்தாந்த பிடிப்பாலும் போராட்டக் குணத்தாலும் வெகு சீக்கிரமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முகமாக மாறினார்.
1980 களில் தொடக்கத்திலேயே கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினராகினார். 1992 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் பொலிட்பியூரோவில் உறுப்பினரானார்.
அரசியல் பங்களிப்பு…
கட்சியைக் கடந்து அரசியல்ரீதியாகவும் பெரும்பங்களிப்பை செய்திருக்கிறார். 1996 இல் தேவகவுடா பிரதமராக ஆட்சியமைத்த போதும் சரி 2004 இல் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் ஆட்சியமைத்த போதிலும் சரி, குறைந்தபட்ச செயல் திட்டத்தை கட்டமைத்ததில் யெச்சூரியின் பங்கு பெரிதாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில்தான் 40 க்கும் அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்று வலுவாகவும் இருந்தது.
யெச்சூரியும் 2005 லிருந்து 2017 வரைக்கும ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்திருந்தார். யெச்சூரியின் செயல் வேகத்தையும் கொள்கைப் பிடிப்பையும் கண்டு 90 களின் ஆரம்பத்தில் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவரே யெச்சூரியை கேபினட் அமைச்சராக ஆக்கி தன்னுடைய சகாக்களில் ஒருவராக மாற்ற நினைத்ததாகவும் செய்திகள் உண்டு. ஆனால், யெச்சூரி அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. புறவாசல் வழியாகக் கிடைக்கும் இந்த மாதிரியான பதவிகளை விட கம்யூனிச சிந்தாத்தில் பிடிப்போடு நிற்பதும் அதன்வழி மக்களுக்காக உழைப்பதும்தான் முதன்மை நோக்கம் என்பதில் தெளிவாக இருந்தார்.
சக ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவரான பிரகாஷ் காரத்துக்கு பிறகு 2015 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுச்செயலாளர் எனும் உயரிய பொறுப்பை சீதாராம் யெச்சூரி பெற்றார். வகுப்புவாதத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பதில் எந்த காலத்திலும் அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. கடைசி வரைக்குமே பிளவுவாதத்துக்கு எதிராக பேசியிருக்கிறார். அரசின் ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகளை எதிர்ப்பதில் உறுதியாக நின்றிருக்கிறார். அத்தனை கட்சிகளும் தேர்தல் பத்திரங்களின் வழி நிதி பெற்றபோது, அதற்கு எதிராக ஒலித்த மிக முக்கியமான குரல் யெச்சூரியினுடையது. ‘இனி நீங்கள் நாடாளுமன்றத்தை புல்டோசர் கொண்டு இடிக்க முடியாது.’ என சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பேசியிருந்தார்.
மதரீதியான பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசியதால் ஒரு கட்டத்தில் சில இந்துத்துவா ஆதரவாளர்களால் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார். எமெர்ஜென்சியின் போதும் சரி இப்போதும் சரி அவரின் குரல் எப்போதுமே மாறவில்லை. கொள்கைப் பிடிப்போடு மக்களின் நலன்சார்ந்து மட்டுமே எப்போதும் முழங்கியிருக்கிறார்.
செங்கொடி உயர்த்திய போராளியாக தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர் அதில் எந்த களங்கமும் ஏற்படாத வண்ணம் அப்படியே தன்னுடைய பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். காற்றில் கலந்திருக்கும் இந்த கம்யூனிச குரலை மக்கள் என்றைக்கும் நினைவில் வைத்திருப்பார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY