திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சித் தலைவரின் கணவர் விக்டர் என்கிற மாத்தையன். இவர், தி.மு.க-வின் நகர இளைஞரணித் துணை அமைப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர்மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மட்டும் 14 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில், 13 வழக்குகளில் கைதாகி சிறைக்கும் சென்றவர் விக்டர். இந்நிலையில், வாட்ஸ்அப் குழு ஒன்றில் விக்டர் பேசிய ஆடியோ, பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
இது குறித்து நேற்று வெளிவந்த `ஜூனியர் விகடன்’ இதழில் “ஒரு டைம் இறங்கிட்டேன்… கறியைப் பிச்சுடுவேன்!’’ – ஆளுங்கட்சிப் பிரமுகர் அடாவடி? என்கிற தலைப்பில், விரிவான கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள விக்டர், “ஆடியோ குரல் பதிவு என்னுடையதுதான். கொஞ்சம் கோபத்தில் பேசிவிட்டேன். அது, அரசியல் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் கிடையாது. எருதுகட்டு குரூப்.
என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார்கள். பதிலுக்குத்தான் நான் அப்படிப் பேசினேன். நான் போதைப்பொருள் விற்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தவறான தகவலைப் பரப்புகின்றனர்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, `மின்னல் ராணி’ எனப் பெயரிட்டு விக்டர் வளர்த்துக்கொண்டிருக்கும் மாடுகள் `எருதுகட்டு விழாக்களில் பங்கேற்கக் கூடாது’ என `ஓராண்டு தடை’ விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கம் சார்பாக முடிவெடுத்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பில், “ஜோலார்பேட்டை மின்னல் ராணி மாட்டின் உரிமையாளர், எருது விடும் திருவிழாவைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் அவரது மாட்டுக்குக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு நிபந்தனையில்லாமல் `தடை’ விதிக்கப்படுகிறது. எருது விடும் திருவிழாவில் சீர்குலைக்கும் வகையில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள்மீது இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.