GST: “ஊறுகாய் மாமினு சொல்லலாம்… என் பதில் இதுதான்” – ஜிஎஸ்டி புகாருக்கு நிர்மலா சீதாராமன் பளீச்!

கோவை உணவக உரிமையாளர் ஒருவர், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நையாண்டியாக முறையிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

நிர்மலா சீதாராமன்

அப்போது அவர், “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாகப் பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.

எங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், மாநிலங்களிலிருந்தும் அந்தக் குழுவில் உள்ளனர். அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி-யை பரம விரோதியாகப் பார்ப்பவர்களுக்கு இது ஆதாயமாக இருக்கும்.

கோவை ஹோட்டல் உரிமையாளர்

ஊறுகாய் மாமியை இப்படி எல்லாம் கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று சொல்லலாம். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. ஜி.எஸ்.டி வரியை மக்களுக்கு எந்த சுமையும் இல்லாமல், எளிமையாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில்தான் இறங்கியுள்ளோம்.  

ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசுக்கு வருவாய் அதிகமாய் உள்ளது, தமிழகத்துக்குக் குறைவாய் கொடுக்கிறோம் என்பது தவறு. மத்திய அரசு மீது தமிழ்நாடு அரசு சார்பாக யார் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் அரசாங்கத்திலிருந்து கொண்டே புரியாமல் பேசுவது பயமாய் இருக்கிறது.

ஜிஎஸ்டி

வசூலிக்கும் வரியில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், 50 சதவிகிதம் மாநில அரசுக்கும் செல்கிறது. எங்களுக்கு வரும் 50இல் 41 சதவிகிதமும் மாநில அரசுக்குத்தான் செல்கிறது. 

100 ரூபாயில், 72 ரூபாய் மாநில அரசுக்குத்தான் செல்கிறது. எங்களுக்கு 31 ரூபாய்தான் மிஞ்சும். பைனான்ஸ் கமிஷன்தான் மாநிலங்களுக்கான நிதியை நிர்ணயம் செய்கிறது. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை நாங்கள் ஒதுக்குகிறோம். இதில் எனக்கு அதிகாரம் இல்லை.

நிதி (File Photo)

எனவே நிதி குறைவாக இருக்கிறது என நினைத்தால், பைனான்ஸ் கமிஷனிடம்தான் சொல்ல வேண்டும். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் அவர்களின் பங்கைக் கேட்டால் என்னாவது?” என்று கேள்வி எழுப்பினார்.