எளிமையாக 2K கிட்ஸ் என்று அறியப்படும் Gen Z தலைமுறையினரில் முக்கால்வாசி பேர், மற்றவரின் கீழ் வேலை செய்வதை விடவும் தொழில்முனைவோராக, முதலாளியாக இருக்க விரும்புவதாக ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சான்டாண்டர் யு.கே (Santander UK) எனும் இங்கிலாந்து நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், Gen Z தலைமுறையினர் 76 சதவிகிதம் பேர் தங்களைத் தாங்களே நம்பி சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், 39 சதவிகிதம் பேர் இவற்றை ஸ்மார்ட்போனிலேயே நிர்வகித்துக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், குறிப்பாக வழக்கமான 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகளை Gen Z தலைமுறையினர் நிராகரிப்பதாகவும் ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பாதி பேர், Gen Z மற்றும் Millennials தலைமுறையினர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்ததால், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் கூடுதல் அட்வான்டேஜ் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இதுவே ஒப்பீட்டளவில், இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரில் 34 சதவிகிதம் பேருக்கு கல்வி மற்றும் தொழிலில் சமூக அழுத்தம் காரணமாக சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆய்வு கூறுகிறது. இது குறித்துப் பேசியிருக்கும் சான்டாண்டர் யு.கே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் ரெக்னியர் (Mike Regnier), “டிஜிட்டல் ஆர்வமுள்ள Gen Z தலைமுறையினர் தொழில்முனைவோர் மனப்பான்மையைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் சொந்தமாக வெற்றிபெறத் தேவையான பண்புகள் வயதைச் சார்ந்தது அல்ல.
ஆர்வம் மற்றும் விருப்பத்தால் அவை நடக்கின்றன. பெரும்பாலும் ஒரு சிக்கலைத் தீர்க்க வேண்டிய அவசியத்தால், சிலர் இந்தப் பண்புகளை ஆரம்பத்திலேயே வளர்த்துக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். எவ்வாறாயினும், Gen Z மற்றும் Millennials மிகவும் தொழில்முனைவோராக இந்த ஆய்வில் கருதப்பட்டாலும், வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல.