Vinesh Phogat: `என் அனுமதியின்றி புகைப்படம்; எல்லாவற்றிலும் அரசியல்’- PT Usha-வை சாடும் வினேஷ் போகத்

பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், பெண்கள் மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு, இந்தியா சார்பில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், 100 கிராம் எடை அதிகமிருப்பதாக கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போதே, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், ஒலிம்பிக் அமைப்பு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்

இந்த நிலையில், எடைக் குறைப்புக்காக கடுமையாக பயிற்சி செய்த வினேஷ் போகத், உடல்நிலை சரியில்லாமல், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவரான பி.டி.உஷா, வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்தப் புகைப்படம் வெளியானது. சிகிச்சை முடிந்து வெறும் கையுடன் நாடு திரும்பிய அவரை நாட்டுமக்கள் கோலாகலமாக வரவேற்றனர். இதற்கிடையில், மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த வினேஷ் போகத், மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.

அதற்கு அடுத்தபடியாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். வெளியே வந்த பிறகுதான் உங்களின் ஆதரவை என்னால் உணர முடிந்தது. வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களில் ஒன்றை நான் கடந்து செல்லும்போது, என்னுடன் இருப்பதாக காண்பிக்க, என் அனுமதியின்றி என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பி.டி.உஷா.

வினேஷ் போகத்

‘உன்னுடன் உனக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்றுகூட என்னிடம் சொல்லாமல், அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். உங்கள் ஆதரவை அப்படி காண்பித்திருக்க வேண்டியதில்லை. நான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ள முயன்றபோது, இந்திய ஒலிம்பிக் சங்கத்திலிருந்து எனக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிறைய அரசியல் நடக்கிறது. பாரிஸிலும் அதுதான் நடந்தது. அதனால்தான் ‘மல்யுத்தத்தை விட்டுவிடாதீர்கள்’ என நிறைய பேர் சொல்லியும் அதிலிருந்து விலகினேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.