TTV Dinakaran: `தேனிக்கு மாறும் தலைமை அலுவலகம்?’ – அ.ம.மு.க-வில் நடப்பது என்ன?

அ.ம.மு.க கட்சி தொடங்கியபோது, சென்னை அசோக்நகரிலுள்ள ஒரு வீட்டில்தான் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. தொழிலதிபர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான அந்த வீட்டை புனரமைத்து, கட்சியின் தலைமை அலுவலகமாக நடத்தினார் டி.டி.வி.தினகரன். பின்னாளில், கருத்து முரண்பாடு காரணமாக இசக்கி சுப்பையாவும் தினகரனும் பிரிந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க-வில் இணைந்தார் இசக்கி சுப்பையா. அ.ம.மு.க தலைமை அலுவலகத்திற்காக புதிய இடம் தேடிய தினகரனுக்கு, ப்ரிஸ்ட் பல்கலைக்கழக தரப்பிலிருந்து ஆதரவளித்தனர். சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, பல்கலைக்கழக நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒரு கட்டடத்தை, அ.ம.மு.க-வுக்கு வாடகைக்குக் கொடுத்தனர். கடந்த சில வருடங்களாக அந்தக் கட்டடத்தில்தான் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தேனிக்கு ஜாகை மாறும் முடிவை எடுத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இதன் பின்னணியில், வாடகை பாக்கி காரணமும் சொல்லப்படுகிறது.

டி.டி.வி.தினகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர், “ப்ரிஸ்ட் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கட்டடத்திற்கு, மாதம் சில லட்சம் ரூபாய்கள் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் சரியாகச் சென்றுகொண்டிருந்த வாடகை பின்னாளில் சரியாகச் செலுத்தப்படவில்லை. அதில், ப்ரிஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகம் கடுப்பாகிவிட்டது. கட்சி அலுவலக வளாகத்திலேயே தங்களது கல்லூரி வாகனங்களை நிறுத்தினர். அப்போதுகூட, அ.ம.மு.க தலைமை அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு கட்டடத்தின் உரிமை கைமாறியது. கட்டடத்தை வாங்கிய அந்த எண்ணெய் நிறுவனம், கட்சி அலுவலகத்தை காலிச் செய்யச் சொல்லி அறிவுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அலுவலகத்தைக் காலி செய்ய முடிவெடுத்தார் தினகரன்.

அவரது வீடு அமைந்திருக்கும் அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியிலேயே ஒரு அப்பார்ட்மென்ட்டில் வீட்டை வாடகைக்கு எடுக்கச் சொல்லியிருக்கிறார். சிறிய இடமாக இருந்தாலும், கட்சி அலுவலகத்தை அதிலேயே நடத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார். அதேநேரம், அ.ம.மு.க-வின் தலைமையகத்தை தேனிக்கு மாற்றவும் முடிவெடுத்திருக்கிறார். அதற்காக தேனியில் பிரமாண்டமாக ஒரு இடத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில்தான் போட்டியிட்டார் தினகரன். பெரிய கூட்டணி ஏதுமில்லாமல், பெரியளவில் செலவும் செய்யாமல், அவருக்கு 2,92,668 வாக்குகள் கிடைத்தன. தென்மாவட்டங்களில், அ.ம.மு.க-வுக்கென வாக்குகள் இருக்கின்றன. கட்சியின் கட்டமைப்பும் வடமாவட்டங்களோடு ஒப்பிடுகையில் தென்மாவட்டங்களில்தான் பலமோடு இருக்கிறது. அதற்காகத்தான், தேனியில் கட்சியின் தலைமை அலுவலகத்தை அமைக்க முடிவெடுத்திருக்கிறார் தினகரன். இடம் கிடைத்தவுடன் விரைவிலேயே தேனிக்கு ஜாகை மாறிவிடுவோம்” என்றனர் விரிவாக.

அ.ம.மு.க

ராயப்பேட்டை அலுவலகத்தின் வாடகைப் பஞ்சாயத்து தொடர்பாக, மன்னார்குடி உறவுகள் சிலர் தினகரனுக்கும் ப்ரிஸ்ட் பல்கலைக்கழக தரப்புக்கும் இடையே சமரசம் பேசியிருக்கிறார்கள். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால்தான், கட்டடத்தை எண்ணெய் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு பல்கலைக்கழக தரப்பு ஒதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, தென்மாவட்டத்தில் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள தேனிக்கு மாறுகிறார் தினகரன். தேர்தல் சமயத்தில் அவரும் அவருடைய மனைவி அனுராதாவும் தங்குவதற்கு ஒரு வீடும் வாடகைக்கு எடுக்கப்பட்டது. தற்போது, சொந்தமாகவே ஒரு வீட்டை தேனியில் வாங்கி, அங்கேயே செட்டில் ஆவதற்கும் தினகரன் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY