பாகிஸ்தான் கடல் பகுதிகளில் கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு என்றும், இதனை வெளியில் எடுப்பதன் மூலம் பாகிஸ்தானின் தலை எழுத்தே மாறலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு!
Dawn News TV என்ற பாகிஸ்தான் ஊடகம், நட்பு நாடுடன் இணைந்து 3 ஆண்டுகள் நிலப்பரப்புகளை ஆராய்ந்து இந்த எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது.
ஆய்வு மற்றும் ஏலத்திற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எண்ணெய் கிணறுகள் அமைத்து, கட்டமைப்புகளை உருவாக்கி எண்ணெய்யைப் பிரித்தெடுக்க சில ஆண்டுகள் செலவாகலாம். இதற்கான முதலீடுகள் குவியும் என்பதில் சந்தேகமில்லை!
என்னென்ன பலன்கள்?
பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத் (Oil and Gas Regulatory Authority – OGRA) தலைவர் முகமது ஆரிஃப், எண்ணெய் வளம் மீது நம்பிக்கை இருந்தாலும், நம் எதிர்பார்ப்பு நிறைவேறாமலும் போகலாம் எனப் பங்குதாரர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு பக்கம், எண்ணெய், எரிவாயுவைத் தாண்டி பல மதிப்புமிக்க கனிம வளங்கள் அந்தப் பகுதியில் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது பல தரப்பில் பொருளாதாரத்தை உயர்த்த உதவக்கூடும்.
இப்போது வெனிசுலா அதிக எண்ணெய் இருப்பு உள்ள நாடாக அறியப்படுகிறது. சௌதி அரேபியா, இரான், கனடா, இராக் ஆகிய நாடுகள் அதிக எண்ணெய் இருப்புகள் உள்ள நாடுகளாக அறியப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்கள் இருக்கின்றன.
பாகிஸ்தானில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி இறக்குமதியைக் குறைக்க உதவும் என்கிறார் முகமது ஆரிஃப். மேலும், எண்ணெய் இருப்புக்களுக்கான வாய்ப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு துளையிடும் செயல்முறை தொடங்க இன்னும் 5 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு தேவைப்படும் எனவும், 4 முதல் 5 ஆண்டுக்காலம் எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
“ஆய்வுகள் முடிந்து உறுதியாக எண்ணெய் இருப்பு எடுக்கப்படும் வரை நம் உற்சாகம் யூகத்தின் அடிப்படையிலானதே” என்கிறார் முகமது ஆரிஃப்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
பாகிஸ்தானுக்கு அதன் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் சரிவைச் சந்தித்து வருவதாக உலக வங்கி கூறியிருக்கிறது. மேலும் பெருமளவு கடனில் மூழ்கியிருக்கிறது.
2023-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடன் சுமார் 126 பில்லியன் டாலர்கள்!
அதிக பணவீக்கம், குறைந்து வரும் அந்நிய கையிருப்பு மற்றும் பல நிதி அழுத்தங்களால் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.
கடலில் கிடைத்துள்ள எண்ணெய் வளம் பாகிஸ்தானின் பொருளாதார தாகத்தைத் தீர்க்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்…