இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நடந்த தள்ளுமுள்ளு; சிறு பதற்றம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி

அவர்களைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். இதன்படி அஞ்சலி செலுத்த புதிய தமிழகம் கட்சியினருக்கு மாலையில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்களுடன் டாக்டர் கிருஷ்ணசாமி, இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்தார். நினைவிடத்தின் அருகே வந்த அவர் மலர் வளையம் வைப்பதற்காக நினைவிட மேடையின் மேலே சென்றார். அவரை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.ஐயர் என்பவரும் மேடை மேலே செல்ல முயன்றார்.

ரகளையில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர்

அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தவர்கள் வி.கே. ஐயரை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கீழே தள்ளிவிட்டனர் ஒரு தரப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த வி.கே.ஐயருக்கு ஆதரவான தரப்பினர் அவர்களுடன் நடத்திய வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.

ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டிய போலீஸார்

இதனால் அந்த இடமே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.