தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் ஜம்மு காஷ்மீர் எம்.பி இன்ஜினீயர் ரஷீத், சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் இன்று வெளிவந்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, சிறையிலிருக்கும் இன்ஜினியர் ரஷீத் என்றழைக்கப்படும் அப்துல் ஷேக் ரஷீத்துக்கு டெல்லி சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இவ்வாறிருக்க, `தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். ஆனால், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் ரஷீத்தை வெளியிட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால ஜாமீன் அக்டோபர் 2-ம் தேதி வரை இருக்கும் என்றும், அதற்கடுத்த நாள் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திகார் சிறையிலிருந்து ரஷீத் தற்போது வெளிவந்திருக்கிறார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு பேசிய ரஷீத், “எனது மக்களை நான் கைவிடமாட்டேன். நாங்கள் பயப்பட மாட்டோம். உமர் அப்துல்லா சொல்வதைவிட எனது போராட்டம் பெரியது. அவரின் போராட்டம் நாற்காலிக்கானது. என்னுடைய போராட்டம் மக்களுக்கானது. பா.ஜ.க-வால் பாதிக்கப்பட்டவன் நான். எனது கடைசி மூச்சு வரை மோடியின் சித்தாந்தத்துக்கு எதிராகப் போராடுவேன். என் மக்களை ஒன்றிணைப்பதற்காகவே காஷ்மீர் வருகிறேன். அவர்களைப் பிரிப்பதற்காக அல்ல.” என்று கூறினார்.
ரஷீத்தின் வருகை அவரின் அவாமி இத்தேஹாத் கட்சியினரிடையே (Awami Ittehad Party) உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, சட்டமன்றத் தேர்தலில் அவாமி இத்தேஹாத் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் தனித்துக் களமிறங்கப்போவதாகக் கூறப்படுகிறது. கூடவே, ரஷீத் ஜாமீனில் வெளிவருவது தேர்தலில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
காரணம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் ரஷீத் சிறையிலிருந்தபடியே, ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில், UAPA சட்டத்தின் கீழ் NIA-வால் கைதுசெய்யப்பட்டு 2019 முதல் தற்போது வரை டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.