VCK: `விஜய் பங்கேற்கலாம்; பாமக, பாஜக-வை ஒதுக்குவதற்குக் காரணம்..!” – திருமாவளவன் ஓப்பன் டாக்

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க திருமாவளவன், ‘அதிமுக’விற்கு அழைப்பு விடுத்திருப்பதும், ‘பாமக’, ‘பாஜக’ கட்சிகளை ஒதுக்குவதற்கும் காரணம் என்ன என்பது குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கிறது. நேற்று இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துத் தெரிவித்துப் பேசியிருந்தனர். இந்நிலையில் ‘அதிமுக’விற்கு அழைப்பு விடுத்திருப்பதற்கானக் காரணம் குறித்தும் ‘பாமக’, ‘பாஜக’ கட்சிகளை ஒதுக்குவதற்கானக் காரணம் குறித்தும் பேசியிருக்கிறார் ‘விசிக’ தலைவர் திருமாவளவன்.

“தேர்தல் அரசியலோடு இதை முடிச்சுப் போட வேண்டாம். அப்படிச் செய்தால் மக்களுக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டின் நோக்கம், தூய்மை கலங்கமாகிவிடும். மதுவை ஒழிக்க எல்லோரும் கைகோர்த்து மக்களுக்காக நிற்க வேண்டிய மேடை இது. ‘அதிமுக-வை அழைப்பீர்களா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கவும், ‘ஆமாம் அதிமுக-வையும் அழைப்போம்’ என்றேன். அதைப் பெரும் சர்ச்சையாக்கிவிட்டார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள ஜனநாயகக் கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதுதான் ‘விசிக’வின் நோக்கம்.

‘திமுக’ கூட்டணியில் நாங்கள் இருந்தபோது 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக ‘அதிமுக’வைச் சேர்ந்த சசிகலா நடராஜன், பழநெடுமாறன் மற்றும் ‘பாமக’வின் நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோருடன் கைகோர்த்து நின்றோம். திமுக எங்களைத் தவறாக நினைத்துக் கொள்ளும் என்று நாங்கள் கருதவில்லை. திமுக என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை. கூட்டணி, தேர்தல் அரசியலைவிட மக்கள் பிரச்னைகள்தான் முக்கியம்.

அதேபோன்றுதான் இன்றும் மதுஒழிப்பிற்காக அனைத்து ஜனநாயகக் கட்சிகளுடன் கைகோர்க்க அழைப்பு விடுத்திருக்கிறோம். இதில் பாமக, பாஜக கட்சிகளை ஒதுக்குவதற்குக் காரணம்; அவர்கள் சாதிய, மதவாதக் கட்சிகள். சதி – மத அடிப்படைவாதத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் அவை. சாதியையும், மதத்தையும் தங்களது அரசில் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பாமக, பாஜக கட்சியினர்.

ரமதாஸ், திருமாவளவன், விஜய்

ஒரு காலத்தில் நாங்களும் ‘பாமக’வுடன் இணைந்து பயணித்தோம். 2011-ம் ஆண்டு தேர்தலில் அவர்களுக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று அவர்களது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள். 2011-ம் ஆண்டு தேர்தலில் ‘விசிக’வுடன் சேர்ந்தால் பெருமளவு வெற்றி பெறலாம் என்று ஒரு கணக்குப் போட்டார்கள். சாதியெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்காக நாங்கள் கைகோர்த்தோம். ஆனால், ‘விசிக’ வுடன் சேர்ந்ததால் வன்னியரின் ஓட்டு ‘பாமக’விற்குக் கிடைக்கவில்லை என்று கருதி ‘விசிக’ வை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தார்கள். அதற்கு ‘Social Engineering’ என்ற வார்த்தையப் பயன்படுத்தினார்கள்.

‘விசிக’வுக்கு எதிராக, திருமாவளவனுக்கு எதிராகப் பேசினால்தான் சொந்த சாதி ஓட்டைத் திரட்டி, ஆதாயமடைய முடியும் என முடிவெடுத்துவிட்டார்கள். ‘விசிக’வுடன் சேர்ந்ததும், பிரிந்ததும், எதிர்த்ததும் அவர்கள்தான். ‘பாமக’-வுடன் சேர்ந்துப் பயணித்து ஒரு பட்டறிவுக் கிடைத்துவிட்டது. ‘பாஜக’ அடிப்படையிலேயே ஒரு மதவாத, சாதியவாதக் கட்சி. எனவே பாமக, பாஜக இரண்டு கட்சிகளுடன் ஒருபோது கைகோர்க்க மாட்டோம்” என்று பேசியிருக்கிறார்.

மேலும் “விசிக-வின் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்கலாம்” என்றும் கூறியிருக்கிறார் திருமாவளவன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY