தன்னம்பிக்கை பேச்சு என்ற பெயரில் பள்ளி மாணவர்களிடையே மூட நம்பிக்கையை பரப்பிவந்த பேச்சாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். `சிறையில் தள்ளினாலும் தனது பேச்சை நிறுத்தமாட்டேன் சிறைவாசிகளிடம் பேசி திருத்துவேன்…என்னைக் கட்டுப்படுத்த முடியாது’ என்றுகூறி காவல்துறையிடம் அடம்பிடித்திருக்கிறார் மகா விஷ்ணு.
கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மகா விஷ்ணு பள்ளி மாணவிகளிடையே தன்னம்பிக்கை பேச்சு எனும் பெயரில் அறிவியலுக்கு மாறாக மூடநம்பிக்கை கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்.
குறிப்பாக, “இறைவன் கருணையானவர் என்றால் ஏன் அனைவரையும் ஒன்று போல படைக்கவில்லை? கண் இல்லாமல், வீடு இல்லாமல் பலர் இருக்கின்றார்கள். ஒருவர் கோடிஸ்வரனாகவும் இன்னொருவர் ஏழையாகவும் இருக்கிறார். ஒருவர் ஹீரோவாகவும், மற்றொருவர் வில்லனாகவும் இருக்கிறார். போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இப்போது ஏழைகளாக கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகளாக இருக்கிறார்கள்’ என்ற பொருள்படி பேசிக்கொண்டிருந்தார்.
உடனடியாக, அந்த பள்ளியின் தமிழாசிரியர் சங்கர் என்பவர் எழுந்து, `பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை பேச்சு பேசுவதற்காக வந்துவிட்டு ஏன் ஆன்மீகம், மறுபிறவி என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்க, உடனே ஆத்திரமடைந்த மகா விஷ்ணு, `நான் பேசாமால் வேறு யார் பேசுவது? பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என சட்டம் இருக்கிறதா? நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? உங்கள் உயரதிகாரிகளைவிட நீங்கள் பெரிய ஆளா?’ என்று விழிச்சவால் உடைய மாற்றுத்திறனாளி தமிழாசிரியரான சங்கரிடம் எகிறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், “அவருக்கு வேற எதோ பிரச்னை இருக்கிறது.. ஈகோ ப்ராபளம் போல!’ என்றும் ஆணவமாக மாற்றுத்திறனாளி ஆசிரியரை புண்படுத்தி பேசினார்.
பள்ளி மாணவர்களிடம் இட்டுக்கட்டிப் பேசிய மகா விஷ்ணு
இந்த சம்வக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து, வியூவ்ஸ்க்காக தனது `பரம்பொருள்’ யூ-டியூப் சேனலிலும் பதிவிட்டு தனக்குத்தானே உலை வைத்துக்கொண்டார் மகா விஷ்ணு. சம்மந்தப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக, பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, `பள்ளிக்கூடங்கள் காவிமயமாக்கப்படுகிறதா?’ என்று கேள்விகேட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை டேக் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாதிரிப் பள்ளியிலும் மகாவிஷ்ணு பேசிய காணொளிகள் வைரலாகின. “ஒரு மந்திரத்தை சொன்னால் பறக்கலாம், ஒரு மந்திரத்தை சொன்னால் நெருப்பு மழை பொழியும்… எல்லா ரகசியங்களும் ஓலைச்சுவடியில் இருக்கின்றன” என்று ஹாலிவுட் படமாக `ஹாரி பாட்டர்’ கதைகளையெல்லாம் பள்ளி மாணவர்களிடம் இட்டுக்கட்டிப் பேசிய மகா விஷ்ணுவின் மூடநம்பிக்கை பேச்சுக்கு எதிர்ப்புக்குரல் வலுக்கத் தொடங்கியது.
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மகா விஷ்ணு மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 5 பிரிவுகளின்கீழ் மகா விஷ்ணுமீது வழக்கு பதியபட்டது. முதல்வர், அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பணிமாறுதல் செய்தார்.
அந்தநிலையில்,` நான் பேசியதில் எந்த தவறும் இல்லை’ என்று ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, தான் சென்னை விமான நிலையத்துக்கு வரும் நாள், நேரத்தை வெளியிட்டு காவல்துறையினருக்கு சவால் விட்டார். அந்தநிலையில், சாவகசமாக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மகா விஷ்ணுவை கொத்தாகப் பிடித்து கைது செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் மகாவிஷ்ணுவை ரிமாண்ட் செய்து செப்டம்பர் 20-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
மகா விஷ்ணுவின் கதை:
இந்த நிலையில், மகாவிஷ்ணு ஒரு சாதாரண ஸ்டாண்ட்-அப் காமெடி செய்யும் சிறுவனாக இருந்து, திரைப்பட தயாரிப்பாளராக வட்டமடித்து இறுதியில் கட்டண வகுப்பு எடுக்கும் யங் சாமியாராக மாறியது எப்படி என்ற கடந்தகால வரலாற்றை புரட்டினோம்.
1994-ம் ஆண்டு மதுரை அலங்காநல்லூரில் பிறந்த மகா விஷ்ணு, பள்ளிக் காலங்களிலேயே பல்வேறு பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார். பேச்சுதான் இனி தன் எதிர்காலம் என்று சிறுவயதிலேயே நினைத்துக்கொண்ட மகா விஷ்ணு, அப்போது சன் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியாக ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு?’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்டாண்ட்-அப் காமெடி செய்தார். அதில் பாராட்டுகளும் புகழும் வந்துசேர, சுற்றுவட்டார கிராமங்களில் கோவில் திருவிழாவில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கேயும் தனது காமெடிகளை பேசி மக்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
அந்தநிலையில்தான், விஷ்ணு மதுரையிலிருந்து தந்தை ஊரான திருப்பூருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அங்கு தனது உறவினர்ள் தொடங்கிய `ரெயின் ட்ரீ’ (Rain Tree) என்ற கம்பெனியில் இணைந்துகொள்கிறார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பாக, சர்க்கரை நோய், ஆண்மைக் குறைவு, பாலியல் நோய்களுக்கு மருந்து என்றுகூறி `ரெயின் ட்ரீ டயாப்-க்யூர்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் மருந்துபொருட்களை விற்பனை செய்யும் மக்கள் முகமாக விளங்கிவந்திருக்கிறார். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் மற்றொரு பிளானாக, `சிட் பண்ட்’ நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டு எழ அனைவரும் தலைமறைவாகி, கம்பெனியும் இழுத்து மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர், தனக்கு கிடைத்த பணத்தை வைத்து திரைத்துறையில் கால்பதித்த மகா விஷ்ணு, `துருவங்கள் பதினாறு’ படத்தின் மலையாள உரிமையை வாங்கி வெளியிட்டிருக்கிறார். அதன்பின்னர், `நான் செய்த குறும்பு’ என்ற பெயரில், `கயல்’ பட நடிகர் சந்திரன், மலையாள நடிகை அஞ்சு குரியன் உள்ளிட்டவர்களை நடிக்க வைத்து திரைப்படத்தை உருவாக்கிய மகா விஷ்ணு இயக்குநர் அவதாரம் எடுத்தார். பின்னர், சந்தர்ப சூழலால் அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்க, தனியே `பரம்பொருள்’ (Pramporul) என்ற பெயரில் யூ-டியூப் சேனலை ஆரம்பித்து தனது பேச்சுக் கலையை மீண்டும் தூசுதட்டத் தொடங்கினார்.
அந்தநிலையில்தான், ஆந்திராவிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்ற மகா விஷ்ணு, அங்கிருக்கும் ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்குச் சென்று வந்திருக்கிறார். அதன்பிறகு, தனது பேச்சின் ரூட்டை மாற்றிய மாகா விஷ்ணு ஆன்மீகப் பாதைக்குத் தாவுகிறார். 2021-ம் ஆண்டு `பரம்பொருள் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளையை திருப்பூரில் தொடங்கினார். பின்னர் `ஞானப் பாதைக்கான வழிகாட்டி’ என்று தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்ட மகா விஷ்ணு `வாழ்வியல் நெறி, ஆன்மீகப் பயணம்’ என பேசி பேசி பொதுமக்களை வசியப்படுத்திருக்கிறார்.
மக்கள் கூட்டம் பெருக பெருக அதை கட்டண வகுப்பாக மாற்றியிருக்கிறார். ஒரு வகுப்புக்கு ரூ.8000 வரை வசூலித்த மகா விஷ்ணுவின் பரம்பொருள் சாம்ராஜ்ஜியம் மெல்ல விரிவடைந்தது. மேலும், தனது பரம்பொருள் தயாரிப்பாக, குருவின் கருணை என்ற பெயரில் வள்ளலார் மாலை, ருத்ராட்சம், கருங்காலி மாலை, சாமி சிலைகள் என பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னை நம்பிவந்த பக்தர்களிடம் விற்பனை செய்தார். நாள்கள் செல்ல செல்ல, முழு ஆன்மீக குருவாகவே தன்னை பிரபலப் படுத்திக்கொண்ட மகா விஷ்ணு, ஸ்ட்ரெஸ் ஃப்ரீ கேம்ப், ரீ-ட்ரீட் கேம்ப் என இளைஞர்கள், மேல்தட்டு வர்க்கத்தினரை கவரும் வகையிலான ஆடல்கள் பாடல்கள் முகாம்களையும் நடத்தி சூழலுக்கேற்ப தனது வாழ்வியல் நெறியின் போதனைகளையும் மாற்றிக்கொண்டார்.
மேலும் தனது பரம்பொருள் யூ-டியூப் சேனலில் `சூரியனுக்கு சென்று வந்த மகா விஷ்ணு, வானத்தில் பறந்த மகா விஷ்ணு, ஆண் துணையே இல்லாமல் குழந்தை பிறக்கும் அதிசயம், நெருப்பு மழை பொழிய வைக்கும் ரகசியம்…’ என அறிவியலுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை இஷ்டத்துக்கு பேசி இருக்கிறார். தற்போது மகா விஷ்ணுவின் இந்த எல்லை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு கடந்து சென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என தற்போது ஆறு நாடுகளில் தனது பரம்பொருள் பவுண்டேஷனின் கிளையை பரப்பி இருக்கிறார் இந்த மகா விஷ்ணு.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY